​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ப.சிதம்பரத்துக்கு சிக்கல்...

Published : Oct 15, 2019 4:17 PM

ப.சிதம்பரத்துக்கு சிக்கல்...

Oct 15, 2019 4:17 PM

திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ள சிறப்பு நீதிமன்றம்,தேவைப்பட்டால் கைது செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 2007 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக 305 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற அனுமதி அளித்த விவகாரத்தில், அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ கைது செய்தது.

செப்டம்பர் 5 ஆம் தேதி முதுல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருவதால், சிதம்பரத்தை கைது செய்து, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அஜய் குமார் குகர், திகார் சிறையில் வைத்தே சிதம்பரத்திடம் விசாரணை நடத்திக் கொள்ளவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்து கொள்ளவும் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

பொதுவெளியில் வைத்து விசாரித்து கைது செய்வது கண்ணியமாக இருக்காது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, சிதம்பரத்தை நாளை அமலாக்கத்துறை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், செல்வாக்கைப் பயன்படுத்தி சிதம்பரம் சாட்சியை கலைக்க கூடும் என்று கூறி ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்தற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிட்டடார்.

சிதம்பரம் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி என அனைவரும் ஜாமீனில் இருப்பதால் சிதம்பரத்திற்கும் ஜாமின் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சிதம்பரம் தரப்பு வாதம் நிறைவடைந்ததை அடுத்து, சிபிஐ தரப்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா நாளை பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வரும் போது ஆஜராகி வாதிட இருக்கிறார்.