​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபாவளிக்கு தயாராகும் செட்டிநாடு பலகாரங்கள்..!

Published : Oct 15, 2019 11:27 AM

தீபாவளிக்கு தயாராகும் செட்டிநாடு பலகாரங்கள்..!

Oct 15, 2019 11:27 AM

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தீபாவளிக்காக சுவை மிகுந்த ருசியான செட்டிநாட்டு இனிப்பு மற்றும் பலகாரங்கள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமும் விற்பனை செய்து அசத்தும் பெண்மணிகள் பற்றிய செய்தி தொகுப்பை காணலாம்.

தீபாவளி என்றாலே புத்தாடையும், இனிப்பும் பட்டாசும் தான் அனைவரின் நினைக்கும் வரும். இந்த தீபாவளிக்கு செட்டிநாடு என்றழைக்கப்படும் காரைக்குடி மற்றும் கோட்டையூர், கானாடு காத்தான், கண்டனூர் உள்ளிட்ட பகுதியில் விதவிதமான இனிப்பு கார வகைகள் தயாரிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சுத்தமான தரமான எண்ணெய், மற்றும் மூலப்பொருள்கள் கொண்டு இனிப்புகளைத் தயாரிப்பதாக பாரம்பரியமாக பலகாரத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவிக்கிறார்கள்.

விஞ்ஞான உலகில் எந்திரமயம் ஆனாலும், மண் மணம் மாறாமல் தயாராவதால் செட்டிநாட்டு பலகாரங்களை மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய் போன்ற வெளிநாட்டு வாடிக்கையாளர்களும் விரும்பி வாங்கிச் செல்வதாகவும், இந்த ஆண்டு ஆன் லைனிலும் விற்பனை செய்வதாகவும் பலகார தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்மணி தெரிவித்துள்ளார்.

தற்போது சுவையான தேன்குழல், பதமான இனிப்பு சீடை, கார சீடை , மொறுமொறு அதிரசம், மாவு உருண்டை, தட்டை வகைகள், சுருள் சீடை, முறுக்கு வகைகள், போன்றவை காரமாகவும், இனிப்பு கலந்தும் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பலகார தயாரிப்பில் ஈடுபடுவதால், நிறைய பெண்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைப்பதாக பெருமிதத்துடன் தெரிவிக்கிறார்கள்.