​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சொத்துக்காக சொந்த தம்பியைக் கொன்ற சகோதரி ?

Published : Oct 14, 2019 2:01 PM

சொத்துக்காக சொந்த தம்பியைக் கொன்ற சகோதரி ?

Oct 14, 2019 2:01 PM

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் வீட்டுக்குத் திருமண அழைப்பிதழ் வைக்க வந்த தம்பியையும் அவரது மனைவியையும் சொத்து தொடர்பான முன்விரோதத்தில் உடன்பிறந்த சகோதரியே கொலை செய்து புதைத்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்தில் சகோதரியும் அவரது மருமகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள தாசநாயக்கனூரை சேர்ந்த செல்வராஜ் - வசந்தாமணி தம்பதியர் நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெறவிருந்த தங்களது மகன் பாஸ்கரின் திருமண அழைப்பிதழ்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 10 ந்தேதி திருப்பூர் அடுத்த வெள்ளகோவில் உத்தண்டகுமார வலசு கிராமத்தில் வசித்து வரும் மூத்த சகோதரி கண்ணம்மாளுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க மனைவி வசந்தாமணியுடன் செல்வராஜ் சென்றிருந்தார்.

அதன் பின்னர் அவர்களது தொடர்புகள் துண்டிக்கப்பட்டு வீடு திரும்பாத நிலையில், அவர்கள் சென்ற இண்டிகா கார் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சாலை பிரிவு சாலையில் கேட்பாரின்றி நின்றிருந்தது. காரைப் பறிமுதல் செய்து விசாரித்த போலீசார், தம்பதியர் இருவரும் கடைசியாகச் சென்ற கண்ணம்மாளின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரிடம் கண்ணம்மாள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். அதேநேரம் அவரது வீட்டுக்குப் பின்புறத்தில் குழி ஒன்று புதிதாக வெட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் தெரியவே, அதனை ஆய்வு செய்தபோது, செல்வராஜ் - வசந்தாமணியின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கண்ணம்மாளிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கண்ணம்மாள், செல்வராஜின் தந்தையான காளியப்பன், தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை மகன் செல்வராஜ் பெயரில் எழுதிவைத்ததாகவும் அந்த நிலத்தை 43 லட்ச ரூபாய்க்கு செல்வராஜ் விற்றதாகவும் கூறப்படுகிறது. அந்த 43 லட்ச ரூபாயில் கண்ணம்மாள் பங்கு கேட்டபோது கொடுக்க மறுத்த செல்வராஜ், ஒரு லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த கண்ணம்மாள், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பியையும் அவரது மனைவியும் மருமகன் நாகேந்திரனுடன் சேர்ந்து தலையில் அம்மிக் கல்லைப் போட்டு கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து கண்ணம்மாளை கைது செய்த போலீசார், ஈரோடு சென்று நாகேந்திரனையும் கைது செய்தனர்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை தடய அறிவியல் துறையினர், கண்ணம்மாளின் வீட்டில் வந்து தடயங்களை சேகரித்துச் சென்றனர். காங்கேயம் வட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் தம்பதியரின் சடலங்கள் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.