​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்...

Published : Oct 14, 2019 12:43 PM

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்...

Oct 14, 2019 12:43 PM

திருத்தணி வட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 11 மாத குழந்தை உட்பட அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த நிலையில் கோவையிலும் டெங்கு காய்ச்சலுக்கு 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன. இதை தொடர்ந்து டெங்குவின் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு விதமான நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

மதுரை 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளான மேலூர், கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், வாடிப்பட்டி, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இங்கு பல்வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 75 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர்களில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தனிப்பிரிவில் 24 மணி நேர தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கோவை 

கோவை அரசு மருத்துவமனையில் பல்வகைக் காய்ச்சலுடன் 184 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 52 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனையில் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சலுக்கு என்று தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு காய்ச்சலுக்காக ரெட் ஜோன் எனப்படும் கொசுவலையுடன் கூடிய 90 படுக்கைகள் கொண்ட நான்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு மருத்துவ குழுவினர் 24 மணி நேர தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். கடந்த மாதங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 35 பேர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 52 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 11 மாத குழந்தை மற்றும் பள்ளி மாணவியைத் தொடர்ந்து 21 வயது இளம்பெண்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அருங்குளம் கிராமத்தை சேர்ந்த வேலு என்பவரின் மனைவி சங்கீதா காய்ச்சல் காரணமாக திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு பாதிப்பால் அடுத்தடுத்து ஏற்படும் உயிரிழப்புகளால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில்3 சிறுவர்கள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காய்ச்சல் காரணமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். கடந்த வாரத்தில் 9 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4 பேருக்கு 24 மணி நேர தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை கண்டறியும் அதி நவீன கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும், காய்ச்சல் ஏற்பட்ட உடனே காலம் தாழ்த்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் மருத்துவ அலுவலர் ஜெயக்குமாரி ஹேமலதா கூறியுள்ளார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு பேரில் ஐந்து பேருக்கு டெங்கு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆறு வயது பெண் குழந்தை, மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகிய ஐவருக்கும் டெங்கு சிகிச்சைகள் மேற்கோள்ளப்பட்டுவருகின்றன. மாவட்டம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், வீடு வீடாக சென்று, ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடையே டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் முப்பது பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருபத்தைந்து பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தஞ்சவூர்:

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 74 பேரில், 3 பேருக்கு டெங்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
நிலவேம்பு கசாயம், காய்ச்சி வடிகட்டிய தண்ணீர், கஞ்சி உள்ளிட்டவை அவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் கொசுவலையுடன்கூடிய படுக்கைகள் வழங்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எந்நேரமும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படி வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் குமுதா லிங்கராஜ் தெரிவித்துள்ளார்.

திருச்சி:

திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் 80 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இரண்டு பேருக்கு டெங்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் 24 மணி நேர தனிப்பரிவு தொடங்கப்பட்டு, மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் லேப் டெக்னிசியன்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

கரூர்:

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 42 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இரண்டு பேருக்கு டெங்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையிலிருந்து வெளியேரும் பொதுமக்கள் கைகளை கட்டாயமாக கழுவிச் செல்லுமாறும் அறிவுத்தப்படுகின்றனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 பேருக்கு டெங்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 7 பேர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும், 10 பேர் மற்ற மருத்துவ மனைகளிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 350க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதாரத் துறை இணை இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதனிடையே, மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஏற்கனவே ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ள நிலையில், மேலும், 1000 சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் மொத்தம் 19 பேர் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வீடு திரும்பி உள்ளனர். மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான தனிப்பிரிவுகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், மருந்து மாத்திரைகள் உள்ளதால் பொதுமக்கள் யாரும் டெங்கு குறித்து அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட சுகாதாரத்துறை நலப்பணிகள் இணை இயக்குனர் கலா தெரிவித்துள்ளார்.