​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுரேஷூக்கு 7 நாள் போலீஸ் காவல்

Published : Oct 14, 2019 12:27 PM

சுரேஷூக்கு 7 நாள் போலீஸ் காவல்

Oct 14, 2019 12:27 PM

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சுரேஷை, 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, திருச்சி நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக சீராத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

இதனிடையே சுரேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி திருச்சி நீதிமன்றத்தில் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கோசலராமன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு திருச்சி மத்திய சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் அழைத்துவரப்பட்ட சுரேஷ், திருச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது, தன்னை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினால் போலீசார் அடித்து காலை உடைத்துவிடுவார்கள் என தனக்கு பயமாக இருப்பதாக நீதிபதியிடம் சுரேஷ் கதறியுள்ளான்.

தொடர்ந்து விசாரணை செய்த நீதிமன்றம், சுரேஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சுரேஷை அழைத்துச்சென்ற போலீசார், ரகசிய இடத்தில் வைத்து அவனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதனிடையே லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் துல்லியமான பட்டியலை போலீசார் வெளியிட்டுள்ளனர். 11 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 27.6 கிலோ தங்கம் 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான 145 கேரட் வைரம், 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரம் பதிக்கப்பட்ட 1160 கிராம் மதிப்பிலான நகைகள் ஆகியவற்றை முருகன் தலைமையிலான கும்பல் சுருட்டியுள்ளது.

மேலும் நான்கரை லட்சம் ரூபாய்மதிப்பிலான பிளாட்டினத்தையும் அவர்கள் கொள்ளையடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில், முருகனிடம் 12 கிலோ நகைகள் இருப்பது தெரியவந்தது.

மேலும் மணிகண்டனிடம் இருந்து 4 கிலோ 250 கிராம், சுரேஷின் தாய் கனகவள்ளியிடம் இருந்து 450 கிராம், கணேசனிடம் 6 கிலோ 100 கிராம் மற்றும் மதுரை சமயநல்லூரைச் சேர்ந்த மகேந்திரனிடம் இருந்து 900 கிராம் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சுரேஷிடம் இருந்து நகைகள் எதுவும் பறிமுதல் செய்யப்படாததால் மீதமுள்ள நகைகள் அவனிடம் தான் இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கும் போலீசார் அவனை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதே போல் முருகன் பங்கான 12 கிலோ நகைகளை பெங்களூர் போலீசார் பறிமுதல் செய்து வைத்துள்ளதால் அதனை நீதிமன்றம் மூலம் பெற போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.