​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அகற்றப்பட்ட மின் விளக்குகள் - மங்கியது மாமல்லபுரம்

Published : Oct 14, 2019 9:54 AM



அகற்றப்பட்ட மின் விளக்குகள் - மங்கியது மாமல்லபுரம்

Oct 14, 2019 9:54 AM

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்காக மாமல்லபுரத்தில்  அமைக்கப்பட்ட அலங்கார விளக்குகள் அகற்றப்பட்டதால் ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகள், நிரந்தரமாக அங்கு மின் விளக்கு வசதியை ஏற்படுத்தித் தருமாறு மத்திய தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்காக அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களில் பல வண்ணங்களில் அலங்கார விளக்குகளும் ஃபோக்கஸ் விளக்குகளும் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு ரம்மியமாக காட்சியளித்தன.

ஊடகங்களில் இந்தக் காட்சிகளைப் பார்த்த மக்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் மாமல்லபுரத்தைக் காண வந்து குவிந்தனர். வெளிநாட்டைப் போன்ற காட்சிகளை கற்பனை செய்துகொண்டு வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மொத்த விளக்குகளும் அகற்றப்பட்டு கும்மிருட்டாக காட்சியளித்த மாமல்லபுரத்தைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் நொந்து போயினர்.

இரவு நேர மாமல்லபுரத்தை ரசிப்பதற்கு என்றே பல கிலோ மீட்டர்கள் கடந்து வந்ததாகக் கூறும் சுற்றுலாப் பயணிகள், நிரந்தரமாக அங்கு மின் விளக்கு அலங்காரத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள, மாமல்லபுர புராதானச் சின்னங்கள் ஒவ்வொன்றையும் காண்பதற்கு குறிப்பிட்ட தொகை மத்திய தொல்துறையினரால் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், குப்பைத் தொட்டி என எதையும் முறையாக ஏற்பாடு செய்துதரவில்லை என்றும் சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வரும் சுற்றுலாப் பயணிகளின் இந்த நியாமான கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பு.....