​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு

Published : Oct 14, 2019 9:49 AM

வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு

Oct 14, 2019 9:49 AM

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அந்தந்தக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாங்குநேரி 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கே.டி.சி.நகரில் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மக்களை திசை திருப்புவதையும், குழப்புவதையுமே திமுக வாடிக்கையாக வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக நெல்லை மாநகர முன்னாள் மேயர் புவனேஸ்வரி பிரச்சாரம் மேற்கொண்டார். திருக்குறுங்குடியில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் வயலில் இறங்கி வாக்கு சேகரித்த அவர், வாழை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடமும் தரையில் அமர்ந்து பேசி வாக்கு சேகரித்தார். மேலும் வயலில் உழவு பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டரில் ஏறி பயணித்தவாறும் வாக்கு சேகரித்தார்.

விக்கிரவாண்டி 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட மதுரப்பாக்கம், ஆவுடையார்பட்டு, வி.சாத்தனூர், பொன்னாங்குப்பம் ஆகிய பகுதிகளில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மக்களிடையே பேசிய அவர், இந்த இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது எனவும், 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் எனவும் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட சிறுவாலை, சூரப்பட்டு, அரும்புலி, ஏழுசெம்பொன் ஆகிய பகுதிகளில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார். அமைச்சருடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பொதுமக்களிடையே அதிமுக வேட்பாளருக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்தார்.

தமிழகம் 2023-ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லா மாநிலம் என்ற நிலையை அடையும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட காணை, பள்ளியந்தூர், கக்கணுர், உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டார். திமுகவை மக்கள் வெறுப்பதாகவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழக்கும் என்றும் அவர் கூறினார்.

புதுச்சேரி 

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிக்குட்பட்ட சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முந்தைய என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் போது புதுவையில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகளவில் இருந்ததாகவும, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் சட்டம் ஒழுங்கு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் ரெயின்போ நகர் பகுதியில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன், பாஜக புதுச்சேரி தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, அதிமுக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.