​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீன அதிபருக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு

Published : Oct 13, 2019 12:54 PM

சீன அதிபருக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு

Oct 13, 2019 12:54 PM

சீன அதிபருக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக, தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.

சீன அதிபரின் வருகையை முன்னிட்டு தமிழக காவல்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னை கிண்டி தொடங்கி மாமல்லபுரம் வரை 40 கிலோ மீட்டருக்கும் மேலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சுமார் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சிறு தடங்கல் கூட ஏற்படாத அளவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக சீன அதிபர் ஸீ ஜின்பிங் பாராட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழியனுப்பச் சென்ற டிஜிபி ஜே.கே.திரிபாதியுடன் சீன அதிபர் ஸீ ஜின்பிங் சென்னை விமான நிலையத்தில் கை குலுக்கினார்.

இதனிடையே சீன அதிபருக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக, சென்னை ஆட்சியர் சீத்தாலட்சுமி, டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா ஆகியோரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக புறப்படுவதற்கு முன்னதாக, அவர்கள் அனைவரையும் சென்னை விமான நிலையம் அழைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இரவு, பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வாக்கி டாக்கியில், ஓபன் மைக்கில் பாராட்டியுள்ளார்.