​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலமைச்சர் தீவிர வாக்குசேகரிப்பு

Published : Oct 12, 2019 8:12 PM

முதலமைச்சர் தீவிர வாக்குசேகரிப்பு

Oct 12, 2019 8:12 PM

திண்டிவனத்தில், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில், மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதலை தடுக்க, மாநில அரசே மருந்து அடிக்கும் பணிகளை மேற்கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். 

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், வருகிற 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட, முண்டியம்பாக்கம், ராதாபுரம், விக்கிரவாண்டி, வி.சாத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில், முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.

தங்களை பார்த்து விபத்தில் ஆட்சிக்கு வந்ததாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதாக முதலமைச்சர் தெரிவித்தார். தாங்கள், 122 எம்எல்ஏக்களுடன் ஆட்சிக்கு வந்ததாகவும், தற்போதும், அதே பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும், முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அதிமுக ஆட்சியை, மு.க.ஸ்டாலின் ஊழல் ஆட்சி என்று கூறுவதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அப்படியானால், திமுக அமைச்சர்களின் கல்வி நிறுவனங்கள் எப்படி உருவாகின என்று கேள்வி எழுப்பினார்.

நீர் மேலாண்மை திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகத் தெரிவித்த முதலமைச்சர், நாட்டிலேயே, நீர் மேலாண்மையில், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

நடப்பாண்டில், 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 1,829 ஏரிகள் தூர்வாரப்பட்டு, குடிமராமத்துபணி நடைபெற்றுள்ளதாகவும், தடுப்பணைகள் கட்டும் பணிக்கு, ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் கூறினார்.

மக்காச்சோள பயிர்களில் படைப்புழுத் தாக்குதல் இருப்பதாகவும், அவற்றை, பூச்சித் தாக்குதலிலிருந்து காத்திட, 154 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில், 48 கோடி ரூபாய் மதிப்பில், மருந்து அடிக்கும் பணிகளை, அரசு மேற்கொண்டிருப்பதாகவும், முதலமைச்சர் தெரிவித்தார்.

திண்டிவனத்தில், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இதுவரை, 48 லட்சம் மாணவர்களுக்கு, சுமார் 6 ஆயிரத்து 812 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.