​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவர்கள் அலட்சிய சிகிச்சை..! கதறும் காய்ச்சல் நோயாளிகள்

Published : Oct 12, 2019 6:49 AM



அரசு மருத்துவர்கள் அலட்சிய சிகிச்சை..! கதறும் காய்ச்சல் நோயாளிகள்

Oct 12, 2019 6:49 AM

கும்பகோணத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளுக்கு எந்தவித பரிசோதனைகளும் மேற்கொள்ளாமல், தொட்டுக் கூட பார்க்காமல் நூதன முறையில் சிகிச்சை அளித்து வருவதாக அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெங்கு காய்ச்சல் சிகிச்சையின் மறுபக்கம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு, சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர். இதுதவிர நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்குள்ள குடிநீர்த் தொட்டியின் காட்சியை பார்த்தாலே அங்கு நோயாளிகளுக்கு குடிக்கக் கூட தண்ணீர் இல்லை என்பது தெளிவாகிறது.. குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரமும் காட்சிப் பொருளாகவே உள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மட்டும் 6 பேர் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 9 குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் குறைவாக உள்ளதால் புதிதாக காய்ச்சல் என்று எந்த நோயாளியும் மருத்துவமனையில் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் அரசு மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

தொடர்ந்து காய்ச்சல் இருப்பதாக, வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வருபவர்களை ஸ்டெதாஸ்கோப் மூலம் முறையாக சோதனை செய்யாமலும், உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளாமலும், பாரசிட்டமால் மாத்திரைகளை மட்டுமே எழுதிக் கொடுத்தனுப்புவதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் கிராமத்திலிருந்து வந்த தாய் ஒருவர், தனது மகளை சிகிச்சைக்காக அழைத்து வந்தபோது, எந்தவித பரிசோதனையும் மேற்கொள்ளாமல் மாத்திரைகளை மட்டுமே எழுதிக் கொடுத்து அனுப்பி விட்டதாக வேதனை தெரிவித்தார்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வரும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு போதிய பயிற்சியும், நோய்களின் சிகிச்சை குறித்த உரிய அனுபவமும் இல்லாத மருத்துவர்களை பணியில் அமர்த்தியுள்ளதால் இதுபோல நடப்பதாக குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், அரசு மருத்துவமனையில் பெயரளவிற்கு இதுபோன்ற பொறுப்பற்ற மருத்துவர்களை பணியில் அமர்த்தி விட்டு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என்கின்றனர்.

இங்கு மட்டுமல்ல, பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை இந்த முறையில்தான் நடப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளதால் சுகாதாரத்துறை தக்க நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் குறைகளை போக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..