​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் மோடி - ஜின் பிங்.. வரவேற்று மகிழ்ந்த தமிழகம்..!

Published : Oct 11, 2019 9:12 PM

சென்னையில் மோடி - ஜின் பிங்.. வரவேற்று மகிழ்ந்த தமிழகம்..!

Oct 11, 2019 9:12 PM

ந்திய சீன தலைவர்களின் முறைசாரா உச்சி மாநாட்டிற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங்கிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் நடைபெற்ற வரவேற்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

டெல்லியிலிருந்து விமானப்படை விமானத்தில் காலை புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, பகல் 12 மணி அளவில் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தா.மா.க தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதையடுத்து, விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவளம் அருகில் உள்ள திருவிடந்தைக்கு சென்ற பிரதமர் மோடியை, அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்ஜமின் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் விடுதிக்கு காரில் சென்ற பிரதமருக்கு, சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் இரு நாட்டு தேசியக் கொடிகளை அசைத்தபடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்திருந்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்த பிரதமர், இரு நாடுகளிடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என்று கூறியுள்ளார்.

இதேபோல், தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து சீன விமானப்டை விமானத்தில் காலையில் புறப்பட்டு பகல் 1.55 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த ஜின்பிங்கிற்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் தலைமைச் செயலாளர், டிஜிபி, வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சீன அதிபரை வரவேற்றனர்...

ஒயிலாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், தப்பாட்டம், பரதம் என பாரம்பரிய நடனங்களுடனும், நாதஸ்வரம், கொம்பு உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தும் அளிக்கப்பட்ட வரவேற்பை சீன அதிபர் மகிழ்வுடன் கையசைத்து ஏற்றார்.

விமான நிலையத்திலிருந்து, பலத்த பாதுகாப்புடன், ஹாங்கி எல்.5 காரில் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு சென்ற ஜின் பிங்கிற்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நட்சத்திர விடுதியின் வாசலில் நாதஸ்வர இசையுடன் அளிக்கப்பட்ட வரவேற்பில், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களும், சீன மாணவர்களும் பங்கேற்றனர். வழி நெடுகிலும் இரு தலைவர்களுக்கும் கலை நிகழ்வுகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சாலைகளின் ஓரங்களில் கூடியிருந்த மக்கள் இரு நாட்டுக் கொடிகளை அசைத்து உற்சாக வரவேற்பளித்தனர். மாலை 4.45 மணியளவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டுடன் மாமல்லபுரத்தின் அர்ச்சுணன் தபசு பகுதிக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி. அர்ச்சுணன் தவம் செய்யும் காட்சிகளை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் சீன அதிபரை வரவேற்க பிரதமர் மோடி காத்திருந்தார்...

சற்று நேரத்தில் அங்கு வந்திறங்கிய சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி. இரு மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் சற்று அருகிலிருக்க இரு தலைவர்களும் பேசிக்கொண்டே மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்கத் தொடங்கினர்.