​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சோளக்காட்டு காதல்.. காதலன் சுட்டுக் கொலை..! பன்றி என நினைத்து தாக்குதல்

Published : Oct 11, 2019 8:59 PMசோளக்காட்டு காதல்.. காதலன் சுட்டுக் கொலை..! பன்றி என நினைத்து தாக்குதல்

Oct 11, 2019 8:59 PM

ர்மபுரி மாவட்டம் பாலகோடு அருகே சோளக்காட்டுக்குள் காதல் செய்த ஜோடியை பன்றி என நினைத்து சுட்டதில் காதலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

காதலி உயிருக்கு போராடி வருகிறார். சுடப்பட்டவரின் சடலம் தண்டவாளத்தில் வீசப்பட்ட பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தர்மபுரி மாவட்டம் பாலகோடு அடுத்த சிக்கமாரண்டஅள்ளி ரயில் தண்டவாளத்தில் கடந்த 8ந்தேதி கை, கால், தலை என உடல் பாகங்கள் தனி தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலமும் அருகில் சேதமடைந்த நிலையில் இரு சக்கர வாகனம் ஒன்றும் கிடந்தது.

தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில் அவர் சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

கொல்லப்பட்டவர் பாலக்கோடு அடுத்த உலகனஅள்ளி கிராமத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுனர் ஆறுமுகம் என்பதை விசாரணையில் கண்டறிந்தனர்.

கிராமத்தில் விசாரித்த போது ஆயுதபூஜை அன்று உறவினருக்கு பொரி கொடுக்க செல்வதாக கூறிவிட்டு சென்றவரை கையைக் கட்டி சுட்டுகொலை செய்து தண்டவாளத்தில் வீசி இருப்பதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். 

இதையடுத்து துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் ? என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்த போது காதல் விவகாரம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது. சுட்டுக் கொல்லப்பட்ட ஆறுமுகத்திற்கு திருமணமாகி ஒரு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ள நிலையில், ராதா என்ற பெண்ணுடன் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று காதலர்கள் இருவரும் சோளக்காட்டுக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இருட்டிய பின்னரும் அங்கிருந்து செல்லாமல் இருவரும் தனிமையை கழித்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அந்த சோளக்காட்டில் நீண்ட நாட்களாக இருந்து வரும் பன்றிகள் அட்டகாசத்தை ஒழிப்பதற்காக சின்னசாமி, சண்முகம் ஆகிய இருவரும் கையில் வேட்டை துப்பாக்கியுடன் வலம் வந்துள்ளனர்.

அப்போது சோளச்செடி அசைவதை பார்த்து காதல் ஜோடி அமர்ந்து இருப்பதை அறியாமல் பன்றிகள் தான் சோளக்காட்டுக்குள் பதுங்கி இருப்பதாக நினைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் துப்பாக்கி குண்டு ஆறுமுகத்தின் உடலை துளைத்து அருகிலிருந்த ராதாவின் உடலில் பாய்ந்துள்ளது.

இருவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாக கூறப்படுகின்றது.

ஆறுமுகத்தின் சடலத்தை மூட்டையில் கட்டி எடுத்துச்சென்று, விபத்தில் இறந்தது போல இருக்க வேண்டும் என்பதற்காக சடலத்தை தண்டவாளத்தில் வீசியுள்ளனர். இரு சக்கர வாகனத்தையும் தண்டவாளத்திலேயே போட்டுச்சென்றுள்ளனர். ரெயில் சென்ற வேகத்தில் ஆறுமுகத்தின் சடலத்தையும், இரு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கி துண்டு துண்டுகளாக்கி கடந்துள்ளது..

காயம் அடைந்த ராதாவை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ராதாவின் காதல் விவகாரத்தை அவரது கணவனிடம் சொல்லாமல் காப்பாற்றுவதாக துப்பாக்கியால் சுட்டவர்கள் வாக்குறுதி அளித்ததால் ஆறுமுகம் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ராதா யாரிடமும் வாய் திறக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இதையடுத்து விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. துப்பாக்கியால் சுட்ட குண்டன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சண்முகம், வெலாம்பட்டியை சேர்ந்த சின்னசாமி, உண்மையை மறைத்த காதலி ராதா ஆகிய மூன்று பேரையும் தருமபுரி ரயில்வே போலீசார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஆறுமுகத்திற்கும், காதலி ராதாவின் கணவர் பழனிக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை இருப்பதால் திட்டமிட்டு ஆறுமுகத்தை கொலை செய்து விட்டு பன்றி என நினைத்து சுட்டுவிட்டதாக நாடகமாடுவதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற சொல்லுக்கு சமீபத்திய உதாரணமாயிருக்கின்றது இந்த கொலை சம்பவம்..!