​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை

Published : Oct 11, 2019 3:59 PM



அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை

Oct 11, 2019 3:59 PM

உலகிலேயே முதல்நாடாக அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது.

சர்வதேச சர்க்கரை நோயாளிகளுக்கான கூட்டமைப்பின் 2015 அறிக்கைப்படி வளர்ந்த நாடுகளிலேயே 2-வதாக சிங்கப்பூரில் அதிக சர்க்கரை நோயாளிகள் வாழ்வதாகக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 13 புள்ளி 7 சதவீதம் பேர் சக்கரை நோயால் அவதியுறுகின்றனர். மரபு வழி வரும் டைப் 1 அல்லாமல், மோசமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளாததால் வரும் டைப் 2 சர்க்கரை நோய்க்கு மட்டும் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முதியவர்கள் மட்டுமின்றி, இளைஞர்களும் குழந்தைகளும் அடங்குவர்.

உலகளவில் 42 கோடியாக உள்ள சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2045-ல் 62 கோடியே 90 லட்சமாக இருக்கும் என்றும் எனவும் அந்த கூட்டமைப்பு கணித்துள்ளது. எனவே மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் வகையில், ஒரு புதிய அறிவிப்பை சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி குளிர்பானத் தயாரிப்பு நிறுவனங்கள் அதில் சர்க்கரையின் அளவு எத்தனை என்பதை லேபிளிலேயே குறிப்பிட்டு அச்சிட வேண்டும். அனுமதிக்கப்பட்ட சர்க்கரை அளவு மறு ஆய்வு செய்ய தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டம் நடத்தப்படும் என்றும், ஆலோசனையில் தீர்மானமாகும் அளவை மீறி சர்க்கரை கலக்கும் நிறுவனங்களின் குளிர்பானங்கள் தொடர்பான தொலைக்காட்சி, பத்திரிக்கை, வானொலி உள்ளிட்ட அனைத்து வடிவ விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

விளம்பரங்களால் அத்தகைய நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் முன்னுரிமை கொடுக்க இயலாதபடி இது தடுக்கும் என்றும், தங்களது நடவடிக்கை உலகிலேயே முதன்முறையானது என்றும் விளக்கமளித்துள்ளது. மேலும் இது முதற்கட்ட நடவடிக்கை தானே தவிர, தொடர்ந்து விதி மீறினால் அந்நிறுவனங்களின் குளிர்பானத்துக்கே தடை விதிக்க நேரிடும் என்றும் சிங்கப்பூர் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.