​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி, சீன அதிபர் வருகை விழாக்கோலம் பூண்டது மாமல்லபுரம்

Published : Oct 10, 2019 3:50 PM

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகை விழாக்கோலம் பூண்டது மாமல்லபுரம்

Oct 10, 2019 3:50 PM

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நாளை வருவதையொட்டி செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளால் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது

விமான நிலையத்திலேயே சீன அதிபரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர் விமான நிலையத்தில் இருந்து கிண்டியிலுள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு சென்று சீன அதிபர் தங்குகிறார்.

இதையடுத்து சர்தார் வல்லபபாய் படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, சோழிங்கநல்லூர் கே.கே. சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு அவர் செல்கிறார். இதனால் அந்த சாலைகள் நெடுகிலும் அவரை வரவேற்கும் வகையில் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோரின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சாலை ஓரத்தில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடத்த 30க்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையோரம் பொதுமக்கள் நின்று சீன அதிபரை வரவேற்பதற்கு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதி முழுவதும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய சுத்தப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது.

அந்த பணியை உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். சீன அதிபர் வருகையின்போது அசம்பாவிதமோ, ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளோ நடந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சீன அதிபர் செல்லும் இசிஆர் சாலையில் தற்காலிகமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. முட்டுக்காடு ஜங்ஷனில் அனைத்து வாகனங்களும் காவல்துறையினரால் பரிசோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று சின்னங்கள் சுத்தப்படுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கின்றன.

இதேபோல், கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மென் கோவ் ஹோட்டலில் பிரதமர் மோடி நாளை தங்குகிறார்.இதையொட்டி, அந்த ஹோட்டல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழக காவல்துறை தனது வசம் எடுத்து கொண்டுள்ளது. அதேநேரத்தில் ஹோட்டலின் உள்ளே பாதுகாப்பு பணியை சிறப்பு அதிரடிப்படையான எஸ்பிஜி ஏற்றுக் கொண்டுள்ளது.

பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், அப்பகுதியில் பிரமாண்ட அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருப்பதுடன், வாழை தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி தங்கும் ஹோட்டல் அருகே இருக்கும் கார்மெல் நகரில் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக காவல்துறை தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளையும், நாளை மறுநாளும் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாமென்றும், சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித் திரிய வேண்டாமென்றும் காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.