​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தசரா திருவிழா -களைகட்டிய 9ஆம் நாள் கொண்டாட்டம்.!

Published : Oct 07, 2019 8:59 PM

தசரா திருவிழா -களைகட்டிய 9ஆம் நாள் கொண்டாட்டம்.!

Oct 07, 2019 8:59 PM

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் 9ஆம் நாளில் பக்தர்கள் காப்பு கட்டி சிவன், பார்வதி, விநாயகர், முருகன் ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து குழுவாக ஊர், ஊராக சென்று காணிக்கை பெறும் நிகழ்வு அரங்கேறியது.

தசரா என்பது ‘தஸ் ஹரா’ என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து வருகிறது. பத்தை தோற்கடித்தல் என்பது அதன் பொருளாகும். அதாவது நம்மிடம் உள்ள பத்து தீய எண்ணங்களை தோற்கடித்தல் என்று பொருளாகும். காமம், குரோதம், மோகம், லோபம், தற்பெருமை, பொறாமை, சுயநலம், அநியாயம், கொடூரம், அகங்காரம் ஆகிய 10 தீய எண்ணங்களை தோற்கடித்தல் என்று பொருள்படுகிறது.

இந்த தசரா திருவிழாவின்போது 40 நாட்கள் விரதமிருந்து வரும் பக்தர்கள், தாங்கள் வேண்டியது நிறைவேற பல்வேறு வகையான வேடமணிந்து ஊர் ஊராகச் சென்று மக்களிடம் காணிக்கைகளைப் பெறுவார்கள். இதன் மூலம் தான் என்ற அகங்காரம் உட்பட மேற்கண்ட 10 தீய எண்ணங்களும் அழிவதாக அவர்கள் நம்புகின்றனர்.

திருமணத் தடை, நோய்கள் நீங்க, குழந்தை பேறு வேண்டி என பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தவும் விநாயகர், முருகன், காளி, குறவன் குறத்தி, போலீஸ், என விதவிதமான வேடங்களை அணிந்துகொள்கின்றனர். வேடமணிந்த பக்தர்கள் தனியாகவோ, குழுவாகவோ பொதுமக்களிடம் சென்று தர்மம் பெறுகின்றனர்.

இப்படி 10 நாட்களும் எடுத்த தர்மத்தில் சேர்ந்த பணத்தை சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் கோயிலில் உள்ள உண்டியலில் செலுத்துவார்கள்.

விழாவின் 9ஆம் நாளான திங்கட்கிழமை பரமன்குறிச்சி விஸ்வகர்மா தசரா குழுவினர் காப்பு கட்டி சிவன், பார்வதி, விநாயகர், முருகன், ராஜா, ஆஞ்சநேயர் உள்ளிட்ட வேடங்கள் அணிந்து, குழுவாக ஊர், ஊராக சென்று ஆடி காணிக்கை பெற்றனர்.

அக்னி சட்டி எடுத்த பக்தர் அருள் வந்து அந்த அக்னி சட்டியுடன் சுற்றியும், மூன்று விரலில் நிறுத்தியும், ஆடுயது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

ஆஞ்சநேயர் வேடம் அணிந்த பக்தர்கள் பற்களால் தேங்காயை உரித்து, தலையில் உடைத்து அதில் இருந்த நீரை பருகியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

செவ்வாய்கிழமை தசரா திருவிழாவின் இறுதிநாள் மற்றும் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதனையடுத்து அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.