​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருணாநிதியுடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்திப்பு

Published : Apr 29, 2018 6:45 PM

கருணாநிதியுடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்திப்பு

Apr 29, 2018 6:45 PM

சென்னை வந்துள்ள தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துப் பேசினார். 

தேசிய அளவில் பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக 3 வது அணி அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திர சேகரராவ் ஈடுபட்டுள்ளார். மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தொலைபேசியிலும், நேரிலும் பல்வேறு தலைவர்களிடம் பேசி வருகிறார்.

இந்நிலையில், ஐதராபாத்திலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த சந்திரசேகரராவ், கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். கருணாநிதியிடம் பூங்கொத்து கொடுத்து நலம் விசாரித்த அவர் சுமார் 10 நிமிடங்கள் கலந்துரையாடினார். பின்னர் சந்திரசேகரராவ் மற்றும் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே வாகனத்தில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் வீட்டுக்கு சென்றனர். ஸ்டாலின் இல்லத்தில் சந்திரசேகர ராவுக்கு விருந்தளிக்கப்பட்டது.

பின்னர் இரு தலைவர்களும் கலந்துரையாடினர். இந்த சந்திப்புகளின் போது தெலுங்கானா நிதியமைச்சர் எட்டலா ராஜேந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் கேசவ்ராவ், தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு தி.மு.க. ஆதரவளிக்கும் என கடந்த 26ம் தேதி மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

இதற்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்து பதிலளித்தார். தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் காவிரி விவகாரம் உள்ளிட்டவற்றில் காங்கிரசுடன் இணைந்து தி.மு.க. செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது அணிக்காக நடைபெறும் முயற்சிகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.