​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Published : Oct 05, 2019 4:54 PM

பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Oct 05, 2019 4:54 PM

தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக்கோரி தொடரப்பட்ட மனு குறித்து, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த  ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், சுகாதாரக் கேடுடன் இருப்பதாகவும், இதற்கு அங்கு ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதுதான் காரணமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு வழங்கியுள்ள வாழ்வுரிமையில் சுகாதாரமான சூழ்நிலையை அனுபவிப்பதும் அடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தெருக்களையும், பொது இடங்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து 21 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக வருவாய் துறை, உள்துறை, போக்குவரத்து துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் சுகாதார துறை செயலாளர்களுக்கும், டிஜிபி-க்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.