​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜிவ்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன்பெற்றார்

Published : Oct 04, 2019 7:37 AM

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜிவ்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன்பெற்றார்

Oct 04, 2019 7:37 AM

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துவந்த  கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜிவ்குமார், அலிபூர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார்.

மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டுவந்த சாரதா நிதி நிறுவனம், 2500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக 2013ஆம் ஆண்டு புகார் எழுந்த நிலையில், அப்போது கொல்கத்தா காவல் ஆணையராக இருந்த ராஜிவ்குமார் தலைமையிலான குழு அவ்வழக்கை விசாரித்தது. பின்னர் அவ்விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தபோது, வழக்கின் முக்கிய ஆதாரங்களை ராஜிவ்குமார் மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, ராஜிவ்குமார் விவகாரத்தையும் சாரதா நிறுவன வழக்குடன் சிபிஐ விசாரித்துவந்தது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக ராஜிவ்குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை கடந்த மாதம் 13ஆம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது.

இதனையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ராஜிவ்குமாருக்கு சிபிஐ தரப்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டபோதும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமலேயே இருந்துவந்தார்.

இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் ராஜிவ்குமாருக்கு நிபந்தனைகளுடன்கூடிய முன்ஜாமீன் வழங்கியது.

இதனைத்தொடர்ந்து அலிபூர் நீதிமன்றத்தில் கூடுதல் தலைமை நீதிபதி சுப்ரதா முகர்ஜி முன்னிலையில் ராஜிவ்குமார்  சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.