​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாய பணிக்கும் வந்தாச்சு வடமாநில இளைஞர்கள்

Published : Oct 03, 2019 8:09 PM

விவசாய பணிக்கும் வந்தாச்சு வடமாநில இளைஞர்கள்

Oct 03, 2019 8:09 PM

கரூர் மாவட்டத்தில் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் விவசாய வேலைகளுக்கும் வடமாநில இளைஞர்கள் வந்து விட்டனர். அவர்கள் குறைந்த ஊதியத்தில், விரைவாக, விவசாய பணிகளை மேற்கொள்வதாக நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்கள் நிறைந்த கரூர் மாவட்டத்தில் பேருந்துகளுக்கு கூண்டு கட்டுவது, ஜவுளி ஏற்றுமதி, கொசுவலை துணி உற்பத்தி என பல்வேறு தொழில்கள் நடைபெறுகின்றன.

இதனால் இங்கு வேலைக்கு ஆட்கள் தேவை அதிகரித்து பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநில இளைஞர்கள் வந்து நிரந்தரமாக தங்கி பணிபுரிகிறார்கள். மேலும், கட்டுமானம், உணவகம், சாலையோர கடைகள் என பல்வேறு தொழில்களிலும் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது விவசாய பணிகளுக்கும் வடமாநில இளைஞர்கள் வந்துவிட்டனர்.

லாலாபேட்டையை அடுத்த பிள்ளாப் பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களில், விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல், மேற்கு வங்காளதைச்சேர்ந்த 75 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாற்று நடுதல் உள்ளிட்ட விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு உள்ளூர் தொழிலாளர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் வரை கூலி கொடுக்கப்படும் நிலையில், வடமாநில தொழிலாளர்கள் ரூபாய் 4 ஆயிரம் முதல் ரூபாய் 4 ஆயிரத்து 300 வரை பெற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர்கள் ஆந்திராவில் விவசாய வேலைபார்த்து, அங்கிருந்து தற்போது கரூர் மாவட்டம் வந்து குளித்தலை, மாயனூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பணி புரிகிறார்கள்.

உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் இரண்டரை நாட்கள் செய்யும் வேலையை இவர்கள் ஒரே நாளில் செய்து முடிப்பதாகவும், குறைந்த ஊதியம் பெற்றுக்கொள்வதால் செலவும் மிச்சப்படுவதாக நில உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.