​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் புள்ளிங்கோவுக்கு மாவுக்கட்டு..!

Published : Oct 02, 2019 6:53 AMபுதுச்சேரியில் புள்ளிங்கோவுக்கு மாவுக்கட்டு..!

Oct 02, 2019 6:53 AM

புதுச்சேரியில், பொதுமக்கள் முன்னிலையில் காவலர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிய ரவுடி, தவறி விழுந்து காலை முறித்துக் கொண்டுளார். புதுச்சேரி காவல்துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழக போலீஸ் பாணியில் மாவுக்கட்டு போடப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

புதுச்சேரியில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் அங்குள்ள பெரும்பாலான பகுதிகள் குற்றங்களின் பிறப்பிடமாகவும் குற்றவாளிகளின் கூடாரமாகவும் மாறி வந்தது. ரவுடிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய காவலர்கள் சிலர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரவுடிகளுடன் கைகோர்த்து கொள்வதால், ரவுடிகள் பயமில்லாமல் சுதந்திரமாக வலம் வருவதுடன், கொலை, கொள்ளை, போனில் மிரட்டிப் பணம் பறிப்பது, தடையின்றி கஞ்சா விற்பனை போன்ற குற்றச்செயல்களைச் சுதந்திரமாகச் செய்து வந்தனர்.

தமிழக காவல்துறையினரிடம் ரவுடிகளுக்கு இருக்கும் பயத்தில் ஒரு சதவிகிதம்கூட, புதுச்சேரி காவல்துறையினரிடம் இல்லாத நிலையில், தற்போது டி.ஜி.பி-யாக பொறுப்பேற்று உள்ள பாலாஜி ஸ்ரீவத்சவா புதுச்சேரியில் ரவுடிப் பட்டியலில் இருப்பவர்களின் விவரங்கள், செயல்பாடுகள் போன்றவற்றைக் கண்காணிக்க உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி, மதுக் கடத்தலைத் தடுக்கும் வகையில், புதுச்சேரி- தமிழக எல்லைப் பகுதிகளில் போலீஸாரின் ரோந்துப் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய பணியில் இருந்த காவலர்களான சிவகுரு மற்றும் மைக்கேல் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, கரிக்கலாம்பாக்கம் மக்கள் கூடும் பிரதான சந்திப்பில் கையில் கத்தியுடன் சில ரவுடிகள் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

காவலர்கள் இருவரும் அங்கு சென்று விசாரித்த போது, ரகளையில் ஈடுபடவர்கள் சிதம்பரம் பெட்ரோல் பங்க் ஊழியர்களைக் கத்தியால் தாக்கிப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற ரவுடி ஜோசப், அவனது கூட்டாளிகளான அய்யனார் மற்றும் அருணாசலம் என்பது தெரியவந்தது. அவர்களில் முக்கிய ரவுடி ஜோசப்பை மடக்கி பிடித்தனர்.

ரவுடியை இருசக்கர வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்துவர முயற்சித்த சமயம், தப்பி ஓடிய ரவுடிகள் இருவரும் வந்து காவலர்களை தடுத்தனர். இதை சாதகமாக்கிய ரவுடி ஜோசப் கூட்டாளிகளுடன் சேர்ந்து போலீசை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடினான்.

நடுரோட்டில் காவல்துறையினரை ரவுடிகள் புரட்டி எடுத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையின் அவசர உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட 2 போலீஸாரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் காவல்துறையினரைத் தாக்கி தலைமறைவான ரவுடிகள் மீது கொலை முயற்சியில் ஈடுபடுதல், காவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

குற்றவாளிகளில் ஒருவனான ரவுடி ஜோசப், கண்டமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடிப்படை போலீசார் மற்றும் வில்லியனூர் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து அங்கு சென்றனர்.

கண்டமங்கலத்தை அடுத்த ஆலமரத்து குப்பம் கரும்பு தோட்டத்தில் ஜோசப் பதுங்கி இருப்பதை கண்டு அவனை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசார் வருவதை கண்ட உடன் தப்பித்து ஓடினான் ஜோசப். அவனை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயற்சித்தபோது போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த ஜோசப்புக்கு வலது கை மற்றும் இடது காலில் முறிவு ஏற்பட்டது.

போலீசாரை தாக்கிய ரவுடி என்றாலும் அவனை மீட்டு மனிதாபிமானத்துடன் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்து மாவுக்கட்டு போட்டு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

புதுச்சேரி காவல் துறை வரலாற்றில் போலீசாரின் வாக்கி டாக்கியை பறித்துச்சென்ற ரவுடியைகூட போலீசார் ஒன்றும் செய்தது கிடையாது. எந்த ஒரு ரவுடிக்கும் பிரபல அரசியல் கட்சியின் பின்புலம் இருக்கும் என்பதால் போலீசார் ரவுடிகளை பேருக்கு கைது செய்து அனுப்பி வைப்பதையே செய்து வந்தனர். இளம் போலீசார் பலர் போலீஸ் பவரை காட்ட துடித்துக் கொண்டிருந்தாலும் அரசியல் தலையீட்டால் அவர்களால் உறுதியான நடடிக்கை ஏதும் எடுக்க இயலாத சூழல் இருந்து வந்தது

புதிய டிஜிபி பாலாஜி ஸ்ரீ வத்சவா உத்தரவின் பேரில் போலீசாரை தாக்கிய ரௌடிக்கு மனிதாபிமான அடிப்படையில் மாவுக்கட்டு போடப்பட்டது இதுவே முதல்முறை. இதனை வரவேற்று அனைத்து போலீசாரும் தங்களுடைய வாட்ஸ் ஆப் டிபி (DP ) -ல் மாவு கட்டு போட்ட ரௌடி போட்டோவை வைத்துள்ளனர். மேலும் சில போலீசார் "என் இனத்தின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது" என வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர். 

மேலும் இரு ரவுடிகளைத் தேடி வரும் நிலையில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க போலீசாரின் மாவுக்கட்டு போடும் மனித நேயப் பணி தொடரட்டும் என பலரும் காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.