​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பொய்களை பரப்புகிறார் மேற்குவங்க முதலமைச்சர்

Published : Oct 01, 2019 5:14 PM

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பொய்களை பரப்புகிறார் மேற்குவங்க முதலமைச்சர்

Oct 01, 2019 5:14 PM

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பொய்களை பரப்புவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அந்த மாநிலத்தில் 2021ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்றார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்கப் போவதில்லை என்று மம்தா பானர்ஜி கூறுவதைச் சுட்டிக் காட்டிய அமித் ஷா, அத்துமீறி நுழைந்த ஒருவரையும் விடப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள், சரியான இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எந்த ஒரு நாடும் மென்மையாக இயங்க வாய்ப்பே இல்லை எனக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பாதுகாப்பிற்காக, தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று கூறினார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால், லட்சக்கணக்கான இந்துக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று மம்தா கூறுவது மிகப்பெரிய பொய் என்று விமர்சித்த அமித் ஷா, எந்த மதத்தினரும் கவலை கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரிடமும் குடியுரிமை திருத்த மசோதா மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கட்சி தொண்டர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.