​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்

Published : Oct 01, 2019 1:29 PM

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்

Oct 01, 2019 1:29 PM

சாரதா நிதி நிறுவன சீட்டுத் திட்ட மோசடி வழக்கில், கொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

மேற்குவங்கத்தை தலைமையகமாகக் கொண்ட, சாரதா நிதி நிறுவனத்தின் 10 ஆயிரம் கோடி ரூபாய் சீட்டுத்திட்ட மோசடி குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த முறைகேட்டில், மேற்குவங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கை முன்னர் மாநில காவல்துறை விசாரித்தபோது, விசாரணைக்கு தலைமை தாங்கிய ராஜீவ்குமார், சான்றுகளை அழித்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ பலமுறை சம்மன் அனுப்பியும் ராஜீவ்குமார் ஆஜராகவில்லை.

சிபிஐ தேடிவந்த நிலையில், ராஜீவ்குமாருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஒருவேளை சிபிஐ அவரை கைது செய்தால் உடனடியாக, தலா 50 ஆயிரம் ரூபாய் என 2 பிணைத் தொகை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ராஜீவ்குமாரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், விசாரணைக்காக சம்மன் அனுப்புவதாக இருந்தால், 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே கொடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், கொல்கத்தாவை விட்டு வெளியேற ராஜீவ்குமாருக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.