​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளையும் கூட்டி ஆலோசனை நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Published : Sep 27, 2019 6:50 PM

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளையும் கூட்டி ஆலோசனை நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Sep 27, 2019 6:50 PM

உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை பெறப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தேர்தல் முன்னேற்பாடுகளுக்கான ஆலோசனைகளை முதலமைச்சர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளார்.

இதன்முதல் நடவடிக்கையாக வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி, வாக்குச்சாவடி மையம் உள்ளிட்ட திருத்தங்களை செல்போன் செயலி மூலம் திருத்தம் செய்துகொள்ளும் பணி முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டு, பணிகள் மாவட்ட அளவிலும், கோட்டம் மற்றும் தாலுக்கா வாரியாகவும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சி சார்பில், நகராட்சி வளர்ச்சி பணிகள், உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம், கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கென தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி குறித்தும், செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

குறிப்பாக கீரிப்பள்ளம் ஓடை தூர்வாருதல், 24 மணி நேரம் தடையில்லா குடிநீர் திட்டம், குழந்தைகளுக்கென சிறுவர் நூலகம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் உள்ளாட்சி பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது, உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதுடன் குளறுபடி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆய்வு கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.