​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடத்தல் குருவியை கடத்திய கும்பல்..! சிக்கிய பின்னணி..!

Published : Sep 24, 2019 7:49 PM

கடத்தல் குருவியை கடத்திய கும்பல்..! சிக்கிய பின்னணி..!

Sep 24, 2019 7:49 PM

வெளிநாட்டில் இருந்து உருக்கிய தங்கத்தை குடலுக்குள் வைத்து சென்னைக்கு கடத்தி வரும் குருவியாக செயல்பட்ட இளைஞரை, கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் கும்பலை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவில், ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

அந்த அறையில் இளைஞர் ஒருவரை அடைத்து சித்ரவதை செய்ததது தெரிந்து அங்கிருந்த 5 பேர் கொண்ட கடத்தல் கும்பலை கைது செய்தனர்.

5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட அந்த இளைஞர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நசீது எனவும், அவர் ஒரு தங்க கடத்தல் செய்யும் குருவி என்பதும் விசாரணையில் அம்பலமானது. துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட முக்கால் கிலோ தங்கத்திற்காக தான் இந்த கடத்தல் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் தொழில் செய்பவர்கள் தான் குருவி என்றழைக்கப்படுகின்றனர்.சென்னை மண்ணடியை சேர்ந்த ஜக்காரியா என்ற தங்க கடத்தல் ஏஜென்டிடம் குருவியாக முகமத் நசீது 15 வருடமாக பணிபுரிகிறார்.

கடந்த மாதம் முனாசீர் என்பவர் துபாயிலிருந்து பல கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்த வேண்டும் என கேட்டுள்ளார். இதற்காக முகமது நசீது, முல்தஸிம் இருவரும் துபாய் சென்று, தங்கத்தை மலக்குடலில் வைத்து, சிறுக சிறுக தங்கத்தை கடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி அதிகாலை சென்னை விமான நிலையம் வந்த இவர்கள் மீது, விமான நிலையத்தில் உள்ள உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகப்பட்டு இருவரது பாஸ்போர்டையும் ஆய்வு செய்தனர்.

ஒரே மாதத்தில் 7 முறைக்கும் மேல் துபாய் சென்று வந்திருப்பது கண்டறிந்து, அவர்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்ததில் வயிற்குள் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும், கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முக்கால் கிலோ தங்கத்தை கைப்பற்றினர்.

இந்த தகவலை ஏஜென்ட் ஜக்காரியா முனாசீரிடம் தெரிவிக்க, தங்கத்தை மோசடி செய்து விட்டு குருவி முகமது நசீது நாடகமாடுவதாக சந்தேகித்துள்ளார்.

இதனிடையே வழக்கில் கைதாகி பிணையில் வந்த முகமது நசீதை தனக்கு தெரிந்த ஆட்களை வைத்து கடத்தி மண்ணடியில் அடைத்து வைத்துள்ளனர். தங்கம் இல்லையென்றால் 5 லட்சம் பணம் வேண்டுமென அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்த தகவல் தெரிந்து தான் கடத்தல் கும்பல் சிராஜூதின், போலி வழக்கறிஞர் ராஜாராம், தியாகராஜன், திருநாவுக்கரசு மற்றும் முன்சீர் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.