​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜீவ் குமாரை எளிதில் கண்டுபிடிக்க முடியாது - கொல்கத்தா காவல்துறை

Published : Sep 24, 2019 6:44 PM



ராஜீவ் குமாரை எளிதில் கண்டுபிடிக்க முடியாது - கொல்கத்தா காவல்துறை

Sep 24, 2019 6:44 PM

சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிபிஐ அமைப்பால் தேடப்படும் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்று கொல்கத்தா நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாரதா நிதிநிறுவன மோசடி, ரோஸ்வேலி நிறுவன மோசடி விவகாரங்கள் குறித்த விசாரணைக்காக ராஜீவ் குமாரை 12 நாள்களாக சிபிஐ அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

அவரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த 13ஆம் தேதி விலக்கிக் கொண்டது. இதையடுத்து ராஜீவ் குமாரையும், அவரது பாதுகாப்பு ஊழியரையும் காணவில்லை.

ராஜீவ் குமாரின் மனைவியும், ஐஆர்எஸ் அதிகாரியுமான சஞ்சிதாவிடம் 4 முறை சி.பி.ஐ. அதிகாரிகள் பேசியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் சந்தெளலியில் உள்ள மூதாதையர் வீட்டுக்கு சென்றும் பார்வையிட்டனர்.

இருப்பினும் ராஜீவ் குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. கொல்கத்தா காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பலர், ராஜீவ் குமாரின் அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டு அவர் மீது அதிக மரியாதையும், அன்பும் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் காவல்துறை அதிகாரிகள் அல்லது காவலர்கள் யாருடைய வீட்டுக்காவது சென்று தங்கியிருக்க முடியும் என்றும், அப்படி தங்கியிருக்கும்பட்சத்தில் ராஜீவ் குமாருக்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினரின் வீடுகளில் சோதனை நடத்துவது சிபிஐக்கு கடினமான காரியம் என அவரது தலைமையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் குமாரின் வழக்குரைஞர் தரப்பில், நீதிமன்றத்தில் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் சிபிஐ விசாரணைக்கு அவர் செல்ல விரும்பவில்லை என்றார்.