இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி
Published : Sep 23, 2019 5:33 PM
மத்திய நிதி அமைச்சரின் வரி சலுகை அறிவிப்பின் எதிரொலியாக இரண்டாவது வர்த்தக தினத்திலும் இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி நிலவியதால், முதலீட்டாளர்களுக்கு பத்தரை லட்சம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்துள்ளது.
பொருளாதார மந்த நிலையில் இருந்து இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக கடந்த வெள்ளிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்பரேட் வரி விகிதத்தை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி சலுகைகளை அறிவித்தார்.
மேலும் ஹோட்டல் அறை வாடகை கட்டணத்திலும் ஜிஎஸ்டி கவுன்சில் சலுகைகளை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1921 புள்ளிகள் அதிகரித்து புதிய உச்சசத்தை தொட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய வர்த்தக தினத்திலும் சென்செக்ஸ் 1075 புள்ளிகள் அதிகரித்து, 39 ஆயிரத்து 90 புள்ளிகளில் நிலைகொண்டது. இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத உயர்வாவாக பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது.
அதன் பலனாக தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 326 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 600 புள்ளிகளில் நிலை பெற்றது. அதாவது கடந்த இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும் சென்செக்ஸ் 2996 புள்ளிகள் உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு பத்தரை லட்சம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்துள்ளது.