​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் துப்புரவு பணியாளர்களை நியமக்க கோரிய வழக்கு

Published : Sep 20, 2019 7:17 PM

பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் துப்புரவு பணியாளர்களை நியமக்க கோரிய வழக்கு

Sep 20, 2019 7:17 PM

புதுக்கோட்டை மாவட்டம், வாழைகுறிச்சி பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் துப்புரவு பணியாளர்களை நியமக்க கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சண்முகம் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், வாழைகுறிச்சியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சுமார் 80 மாணவர்கள் கல்வி கற்பதாக தெரிவித்திருந்தார்.

பள்ளியில் கடந்த ஒரு மாத காலமாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்த அவர், சமூகத்தில் பின் தங்கிய வகுப்பு மாணவர்களை கட்டாயப்படுத்தி கழிவறைகள் சுத்தம் செய்யப்படுவதாகவும், மாணவர்களின் சாதியை அடையாளப்படுத்தும் நோக்கில் அவர்களது அடையாள அட்டையில் தெருக்களின் பெயர் அச்சிடப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதுமட்டுமல்லாது, அப்பள்ளியில் 2019ம் ஆண்டுக்குள்ளாக கழிவறைகளை கட்டிமுடித்து பராமரிக்க அரசுக்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், ஆனால் அரசு அந்த உத்தரவை பின்பற்றவில்லை எனவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாழைகுறிச்சி பஞ்சாயத்து யூனியன் பள்ளியில், அவுட்சோர்சிங் முறைப்படி துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவதால், இப்பணி நியமனம் தொடர்பாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.