​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்- மருத்துவ மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு

Published : Sep 20, 2019 5:27 PM

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்- மருத்துவ மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு

Sep 20, 2019 5:27 PM

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியரின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கியது.

சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துக்கல்லூரில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து அறிக்கை சமர்க்க வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும், சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட அறிக்கையை ஓரிரு நாட்களில் மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வசந்தாமணி தலைமையில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் 150 மாணவ, மாணவிகளின்  நீட் மதிப்பெண் பட்டியல், கலந்தாய்வு ஒதுக்கீடு படிவம் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றை சரிபார்த்து கையொப்பமும் வாங்கப்பட்டது.

இதேபோன்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரிகளில் தலா 250 மாணவர்கள் மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் 100 மாணவர்களின் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. விடுப்பில் உள்ள மாணவர்களின் ஆவணங்களும் ஓரிரு நாட்களில் சரிபார்க்கப்படும் என சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.