​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது

Published : Sep 20, 2019 4:39 PM

தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது

Sep 20, 2019 4:39 PM

தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள  முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனிடையே இது தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பேஸ்புக், வாட்ஸப் கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும், ஆனால் இறுதி உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர ஒரு தளம் அமைத்து கொடுத்து விட்டு, அதில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸப் நிறுவனம் கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், வாட்ஸப் நிறுவனத்திற்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இங்கு இந்தியாவின் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் சமூக வலைதளங்கில் பரப்பப்படும் தவறான தகவல்களால் பல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கருத்து தெரிவித்தனர். காட்சி ஊடகங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் அமைப்பு இருப்பதை போல, சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பு இருக்கிறது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாகவும், இது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது என்றும் கூறினார்.

இதனிடையே டிவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனம் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதை போல வாட்சப் நிறுவனம் வழங்குவதில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.