​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நவீன போர்க்கப்பலில் டிஸ்க்குகள் மாயம் அதிர்ச்சியில் கடற்படை

Published : Sep 19, 2019 8:58 PM

நவீன போர்க்கப்பலில் டிஸ்க்குகள் மாயம் அதிர்ச்சியில் கடற்படை

Sep 19, 2019 8:58 PM

கொச்சியில் கட்டப்பட்டு வரும் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலின் முக்கிய டிஜிட்டல் கருவி மாயமானது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர் கப்பல் கட்டும் பணி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கியது. 2021-ம் ஆண்டு இந்த போர் கப்பல் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

40 ஆயிரம் டன் எடையுடன் நவீன போர் விமானங்கள் கப்பலில் இறங்கும் அளவுக்கு உயர் தொழில் நுட்பத்துடன் இக்கப்பல் கட்டுமான பணி நடந்து வருகிறது. உலகில் 4 நாடுகள் மட்டுமே இத்தகைய தொழில்நுட்பத்தில் கப்பல் கட்டும் திறனை பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் இத்தகைய கப்பல் கட்டப்பட்டு வருவது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

இதனால் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல் கட்டப்படும் தளத்திற்கு யாரும் எளிதில் சென்று விட முடியாத அளவிற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு பணியாற்றும் ஊழியர்களும் பலத்த சோதனைக்கு பிறகே பணிக்கு அனுப்பப்படுவார்கள். மேலும் கப்பலில் உள்ள பொருட்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கப்பலுக்கான பணிகளை செய்து வரும் முக்கிய கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க் மற்றும், பல்திறன் கட்டுபாட்டுக்கு உரிய புராசசர் திருடு போய் உள்ளது. காணாமல் போன கம்ப்யூட்டர் ஹார்டிஸ்குகளில் போர் கப்பலின் வடிவமைப்பு, விமானங்கள் எந்தெந்த பகுதிகளில் இறங்க வேண்டும், எங்கு எரிபொருள் நிரப்ப வேண்டும், எந்த பகுதிகளில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் போன்ற விபரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கேரள மாநில போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தேசிய பாதுகாப்பிற்கு ஏற்பட்ட குந்தகம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கப்பல் கட்டும் தளத்தில் உள்ள யாரோ சிலருக்கு இதில் தொடர்பு இருக்க வேண்டும் என்றும், இந்த சதியின் முழு வடிவம் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போர் கப்பலில் கம்ப்யூட்டர் பொருட்கள் மாயமானது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு கப்பல் போக்குவரத்து துறையும் உத்தரவிட்டது. கேரள போலீஸ் டி.ஜி.பி.யும் தனிப்படை அமைத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.