​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக போராட்டம் ஒத்திவைப்பு

Published : Sep 18, 2019 6:41 PM

திமுக போராட்டம் ஒத்திவைப்பு

Sep 18, 2019 6:41 PM

 இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி திமுக சார்பில் நடத்தப்பட இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் நேரில் அழைத்து உறுதி மொழி அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். ஆளுநர் விடுத்த அழைப்பின் பேரில் சென்ற ஸ்டாலின், சுமார் 40 நிமிடங்கள் வரை அவருடன் ஆலோசனை நடத்தினார். திமுக முதன்மை செயலாளர் டிஆர் பாலு அப்போது உடன் இருந்தார்.

 

பின்னர், அண்ணா அறிவாலயத்தில், செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், இந்தி திணிப்பை எதிர்த்து வரும் 20 ஆம் தேதி திமுக நடத்த உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் கேட்டதாக கூறினார். இந்தியை திணிக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று ஆளுநர் உறுதி அளித்ததை ஏற்று, வரும் 20 ஆம் தேதி நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைப்பதாக ஸ்டாலின் அறிவித்தார்.

 

இந்தி திணிப்பு தொடர்பாக அமித்ஷா விளக்கம் அளித்தது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

 

இதனிடையே, இந்தி மொழி தொடர்பான தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் தான் கூறியது இல்லை என்றார். தாய் மொழிக்குப் பின் இரண்டாவது மொழியாக இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே தான் வேண்டுகோள் விடுத்ததாக குறிப்பிட்டார். தானே ஹிந்தி மொழி பேசாத குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தை சிலர் அரசியல் ஆக்க வேண்டும் என்று நினைத்தால் அது அவர்களது விருப்பம் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.