​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன மழை

Published : Sep 17, 2019 8:59 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன மழை

Sep 17, 2019 8:59 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்தது. கொட்டித் தீர்த்த கனமழையால் சாலையில் மழைநீர் வழிந்தோடியது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மழையால் மிகவும் சிரமமடைந்தனர்.

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. காலையில் வெயில் சற்று அதிகமாக காணப்பட்ட நிலையில் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விட்டுவிட்டு மிதமான மழையாகவும்,கனமழையாகவும் பெய்தது.

அந்த வகையில், அரூர்,பாப்பிரெட்டிப்பட்டி, ஏரியூர், பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த மழைபெய்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் சுமார் அரைமணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. அதிக காற்று வீசாமல் அமைதியாக மழை பெய்ததால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருமயம், அரசம்பட்டி, சமத்துவபுரம், மலைக்குடிப்பட்டி, இளஞ்சாவூர், பொன்னமராவதி கொன்னையூர் காரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீடித்தது. மழையால் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

 புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. காலையில் மேக மூட்டமாக காணப்பட்ட நிலையில், மாலையில் திடீரென இடியுடன் பலத்த மழை பெய்தது. அந்த வகையில், நகர பகுதிகளான ராஜ்பவன் , உப்பளம் , முத்தியால்பேட்டை , அரியாங்குப்பம், நெல்லித்தோப்பு மற்றும் உருளையன்பேட்டை ஆகிய பகுதிகளிலும், கிராம பகுதிகளான பத்துகண்னு , வில்லியனூர், பாகூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது.