​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கச்சா எண்ணை விலை உயர்வு.. இந்தியாவிற்கும் பாதிப்பு..!

Published : Sep 17, 2019 7:21 PM

கச்சா எண்ணை விலை உயர்வு.. இந்தியாவிற்கும் பாதிப்பு..!

Sep 17, 2019 7:21 PM

வுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்திய பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான ஆராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கடந்த 14 ஆம் தேதி ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

அந்த தாக்குதலுக்குப் பின் சவுதி அரேபியாவில் தினமும் 5.7 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி தடை பட்டுள்ளது. இதனால் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வினியோகம் நாள்தோறும் பாதியாக குறைந்துள்ள நிலையில், உலக அளவில் 5 சதவீதம் குறைவதற்கும் காரணமாக அமைந்து விட்டது. இதனால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 19.5 சதவீதம் உயர்ந்து, 72 டாலராக சந்தையில் அதிகரித்துள்ளது.

சவுதி அரேபியாவில் நடத்தப்பட்ட தாக்குதலால் கச்சா எண்ணெய் வினியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்திருந்த போதும், இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 83 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஈராக்கிற்கு அடுத்து, சவுதி அரேபியாவில் இருந்து தான் அதிக அளவில் கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்கிறது.

2018 - 2019 நிதி ஆண்டில் 40.33 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு சவுதி அரேபியா விற்பனை செய்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் இந்தியா மொத்தம் 207.3 மில்லியன் டன்கள் அளவுக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை 10 டாலர் அதிகரித்தால், இந்தியாவிற்கு கூடுதலாக 1500 கோடி டாலர் செலவு ஏற்படும். 10 சதவீதம் உயர்ந்தால், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஜிடிபியில் 0.4 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரை அதிகரிக்கும். இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், அந்த நாட்டிடம் இருந்து பெற்று வந்த கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய சூழலில் இந்தியா இருக்கிறது. மற்றொரு புறம் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து இருப்பதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கணிசமாக உயர்ந்து இருக்கிறது.

பணவீக்கம், வட்டி விகிதம் உயரும் என்பதால் சமூகநலத்திட்டங்களுக்கு மத்திய அரசு செலவிடும் தொகையில் சிக்கல் நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் உயர்ந்துள்ளதை அடுத்து, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளதால், தேவையை ஈடு செய்யவதற்காக ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறிப்பிட்ட அளவு அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.