​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லை மாவட்டத்தை பிரிப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு

Published : Sep 17, 2019 7:10 PM

நெல்லை மாவட்டத்தை பிரிப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு

Sep 17, 2019 7:10 PM

நெல்லை மாவட்டத்தை பிரிக்கும் விவகாரத்தில் மக்களின் கருத்துகளை கேட்டு தமிழக அரசு உரிய முடிவு எடுக்கும் என நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்து கடந்த ஜூலை 18ம் தேதி சட்டப்பேரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பொன்னுதுறை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் நெல்லை மாவட்டத்தை பிரிக்கும் விவகாரத்தில் மக்களிடம் எந்த வித கருத்துக்களும் முறையாக கேட்கப்படவில்லை எனவும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆலங்குளத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் கல்வி மற்றும் தொழிலை நாடி நெல்லை பகுதிக்கே சென்று வருவதாகவும் அதனால் ஆலங்குளத்தை தென்காசியோடு இணைக்கக் கூடாது எனவும்  மனுதாரர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் கருத்தை கேட்டு அதற்கேற்றாற்போல் மாவட்டத்தை பிரிப்பது குறித்து முடிவு எடுக்க அரசுக்கு உத்தரவிட மனுதாரர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆகஸ்ட் 17ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் 500 பேர் கலந்து கொண்டதாகவும், அன்றைய தினமே குற்றாலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் 1200 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

உரிய முறையிலேயே நெல்லை மாவட்டத்தைப் பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  நெல்லை மாவட்டத்தை பிரிக்கும் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்து மற்றும் மனுக்களை பரிசீலித்து தமிழக அரசு உரிய முடிவு எடுக்கும் என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.