​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடல்நீரைக் குடிநீராக்கும் 3 ஆவது திட்டத்திற்கான அரசாணை வெளியீடு

Published : Sep 17, 2019 6:48 PM

கடல்நீரைக் குடிநீராக்கும் 3 ஆவது திட்டத்திற்கான அரசாணை வெளியீடு

Sep 17, 2019 6:48 PM

சென்னை பேரூரில் நாளொன்றுக்கு 40 கோடி  லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 9 கோடி லிட்டரும் நெம்மேலியில் நாளொன்றுக்கு 9 கோடி லிட்டரும் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் நெம்மேலியில் நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் புதிய ஆலைக்கு முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நெம்மேலியின் அருகிலேயே பேரூரில் 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி பேரூரில் 40 கோடி கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் திட்டத்திற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

6 ஆயிரத்து 87 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் விதமாக இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது. ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் ஏற்கனவே 2 ஆலைகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது பேரூர் ஆலைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சென்னையில் பல்வேறு இடங்களில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது