​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காக்னிசன்ட் லஞ்ச வழக்கில் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்

Published : Sep 17, 2019 5:10 PM

காக்னிசன்ட் லஞ்ச வழக்கில் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்

Sep 17, 2019 5:10 PM

காக்னிசன்ட் லஞ்ச வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், சென்னையை அடுத்த ஓஎம்ஆரில் 27 லட்சம் சதுர அடியில் 17 ஆயிரம் பேர் பணியாற்றக் கூடிய கட்டடத்தை கட்டுவதற்கு 2011ஆம் ஆண்டில் திட்ட அனுமதி கேட்டுள்ளது.

இந்த அனுமதியைப் பெறுவதற்கு சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் 2 மில்லியன் டாலர் தொகை லஞ்சம் கேட்டதாகவும், அந்த தொகை அதிகாரிகளுக்கு 2013ஆம் ஆண்டில் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து அமெரிக்காவில் காக்னிசன்ட் முதலீட்டாளர்கள் சிலர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அந்நிறுவனம் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டு, 25 மில்லியன் டாலர்கள் தொகை அபராதம் செலுத்தியுள்ளது.

நிறுவன அளவில் விசாரணை நடத்துவதற்கு 79 மில்லியன் டாலர்கள் தொகையும் செலவிட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை நிறுவனமான எஸ்இசி (SEC) கடந்த வாரத்தில் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், தமிழகத்தில் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள், எவ்வாறு லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி கொடுத்தனர் என்பது குறித்து விவரங்கள் இடம்பெற்றுள்ளன.   

காக்னிசன்ட் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்ரீதர் திருவேங்கடம், லஞ்சம் கொடுக்க அனுமதி அளித்ததையும், இதில் மேலும் 2 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதையும் அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி கண்டறிந்துள்ளது. இந்த லஞ்ச விவகாரத்தில் கட்டுமான நிறுவனமான எல் அண்டு டி-க்கு உள்ள தொடர்பையும் எஸ்இசி வெளியிட்டுள்ளது.

கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த எல் அண்டு டி நிறுவனம், அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்ட பிறகு, காக்னிசன்ட் தலைமை செயல் அதிகாரியாக ஸ்ரீதர் திருவேங்கடத்தை அணுகியுள்ளது. அவர் அமெரிக்காவில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த Gordon Coburn மற்றும் சட்ட ஆலோசனை அதிகாரியாக இருந்த Steven E Schwartz ஆகியோரை அணுகியுள்ளார்.

அவர்கள் தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு தரவேண்டிய தொகையை அனுப்பி வைத்துள்ளனர். இந்த பணத்தை பொய்யான ஒரு காரணத்தை சொல்லி அனுப்புவதற்கு தேவையான வேலைகளை திருவேங்கடம் செய்துள்ளார்.

அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான எஸ்இசி நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, 50 ஆயிரம் டாலர் தொகை அபராதம் செலுத்த ஸ்ரீதர் திருவேங்கடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

2013ஆம் ஆண்டில் நிர்வாக விடுப்பில் அனுப்பப்பட்ட ஸ்ரீதர் திருவேங்கடம், கடந்த ஆண்டு காக்னிசன்ட் நிறுவனத்தில் இருந்து விலகினார். தற்போது அபாரதம் செலுத்த ஒப்புக் கொண்டதன் மூலம் சிவில் வழக்கிற்கான குற்றச்சாட்டுகளோடு அவர் தப்பித்துள்ளார். இருப்பினும் ஸ்ரீதர் திருவேங்கடம் விசாரணைக்கு ஒத்துழைப்புக்கு அளிக்க வேண்டும் என்பதோடு, அபராதத் தொகையை 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

இதனிடையே, காக்னிசன்ட் லஞ்ச வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான CTS சென்னையில் புதிய கட்டடம் கட்ட அனுமதிக்காக, அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தி இருக்கிறது என்றும், அதிமுக அரசின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்திருக்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

லஞ்சம் தந்தவர்களுக்கு அமெரிக்கா தண்டனை தந்திருக்கிறது என்றும், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது FIR கூட பதியாமல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பாதுகாக்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அதுமட்டுமல்ல மத்திய அரசும், சிபிஐயும் கண்டும் காணாமல் இதை ஊக்குவிக்கின்றனவா என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.