​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் இன்று 2வது நாளாக வேலைநிறுத்தம்

Published : Sep 17, 2019 2:51 PM



கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் இன்று 2வது நாளாக வேலைநிறுத்தம்

Sep 17, 2019 2:51 PM

வாடகை உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் சென்னையில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை துறைமுகம் எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் என மூன்று துறைமுகத்திலிருந்து நாள்தோறும்  ஆயிரத்திற்கும் அதிகமான கண்டெய்னர்கள் லாரிகள் மூலம் கண்டெய்னர் பெட்டகங்கள் எடுத்து செல்லப்படுகின்றன.

தற்போது மத்திய அரசு கொண்டு வந்த புதிய போக்குவரத்து சாலை விதியில் லாரிகளில் அதிகளவு எடை ஏற்றினால் அபராதம், மற்றும் லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களுக்கு  சிறை தண்டனை வழங்கப்படும் உள்ளிட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விதிகளின்படி  கண்டெய்னர் லாரியில் ஒரு கண்டெய்னர் பெட்டகம் மட்டுமே ஏற்ற நடவடிக்கை எடுக்கவும், 20 அடி நீளமுள்ள கண்டெய்னர் பெட்டகத்திற்கு உரிய வாடகை நிர்ணயம் செய்யவும் சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர், துறைமுக போக்குவரத்து மேலாளர் மற்றும் சரக்குப் பெட்டக நிலைய அதிகாரிகளிடம் கடந்த 1  தேதி கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை மணு அளிக்கப்பட்டது.

இருப்பினும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் நேற்று நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் ஓடாததால் சென்னை துறைமுகத்திற்கு இழப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் லட்சுமி தலைமையில் நேஷனல் கன்டெய்னர் பிளைட் ஸ்டேஷன் அதிகாரிகள் முன்னிலையில்  காலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால்  கண்டெய்னர் லாரி வேலைநிறுத்தம் தொடரும் என அதன் உரிமையாளர் சங்கத் தலைவர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக சென்னை துறைமுகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை தற்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.