​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது - பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Published : Sep 16, 2019 6:33 PM

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது - பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Sep 16, 2019 6:33 PM

சவூதி அரேபியாவிலுள்ள ஆரம்கோ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என நம்புவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. இதனிடையே, சவூதி அரேபியாவிலுள்ள ஆரம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீதும், எண்ணெய் கிடங்கின் மீதும் அண்மையில் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து பற்றி எரிந்த தீயில்,  அங்கிருந்த லட்சக்கணக்கான கச்சா எண்ணெய் பேரல்கள் எரிந்து சாம்பலாகி விட்டன. தீ அணைக்கப்பட்ட போதிலும், அங்கு  நாளொன்றுக்கு 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பழைய நிலையில் பணிகள் நடைபெற பல வாரங்கள் பிடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து விட்டதால், இந்தியாவிலும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஆரம்கோ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நடைபெறும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என நம்புவதாக தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ஆரம்கோ நிறுவனத்தின் எண்ணெய் மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், ஆரம்கோ நிறுவனத்தின் மூத்த நிர்வாகியை ரியாத்தில் உள்ள இந்தியத் தூதர் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.