கடந்த ஒரு வார காலமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத் தொடக்கம் முதல் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை பல்வேறு புதிய உச்சங்களையும் எட்டி விற்பனையானது. வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயையும் கடந்து விற்பனையானது. இதனிடையே கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் இன்று காலையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 336 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 29 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனையானது.
ஆனால் பிற்பகலில் தங்கம் விலை சற்றே குறைந்தது. காலை நிலவரத்தோடு ஒப்பிடும்போது ஆபரணத்தங்கம் ஒரு சவரன் விலை 48 ரூபாய் குறைந்து, 28 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காலையை விட பிற்பகலில் சற்றே விலை குறைந்திருந்தாலும், நேற்றைய விலையை விட தற்போதைய விலை 288 ரூபாய் அதிகமாகும். ஆபரணத்தங்கம் ஒரு கிராம், நேற்றைய விலையை விட 36 ரூபாய் அதிகமாகும்.
அதே போல் வெள்ளி விலையும் காலையில் கிராமுக்கு 1 ரூபாய் 70 காசுகள் வரை உயர்ந்த நிலையில், பிற்பகலில் சற்றே விலை குறைந்தது. தற்போதைய நிலவரப்படி சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 1 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து 50 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.