​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விடுமுறை நாளான நேற்று சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

Published : Sep 16, 2019 6:44 AM



விடுமுறை நாளான நேற்று சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

Sep 16, 2019 6:44 AM

விடுமுறை நாளான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஏராளமானோர் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். படகு சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் விடுமுறையைக் கழித்தனர்.

ஊட்டி

ஊட்டியில் இரண்டாவது சீசன் களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.புதிதாக 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் டாலியா, மேரிகோல்வு, சால்வியா போன்ற பல வகை வண்ண மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஓணம் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் உதகையின் இயற்கை எழிலைக் காண ஏராளமானோர் வந்து குவிந்தனர்.

அரசு தாவரவியல் பூங்காவின் நுழைவாயில் அருகே பூத்துக்குலுங்கிய பூக்களை கண்டு ரசித்ததுடன், அங்கிருந்த அலங்கார செடிகள், பச்சை பசேல் புல்வெளிகள், பூக்களுக்கு இடையே புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் கண்ணாடி மாளிகை, ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த பூக்களையும் கண்டு ரசித்தனர். பின்னர் படகு இல்லத்திற்கு குடும்பத்துடன் சென்ற மக்கள், அங்கிருந்த மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் அதிகாலை முதலே திரண்ட சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வேன்கள்- கார்களில் வந்து குவிந்தனர். அருவியில் குளித்தபின், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், படகு துறை உள்ளிட்ட பகுதிகளிலும் பொழுதைக் கழித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதியில் வியாபாரம் களைகட்டியிருந்தது.

குற்றாலம்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தக் குளியலிட்டு மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருதால், நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது. ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், கற்களும் விழத்தொடங்கின. இதையடுத்து அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்களை வெளியேற்றிய வனத்துறையினர், குளிக்கவும் தடை விதித்தனர். இதனால், அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தேனி 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக  குளித்து மகிழ்ந்தனர்.  ஹைவேவிஸ் மலையில் உள்ள தூவானம் அணை மற்றும் ஈத்தக்காடு அரிசிப்பாறையில் இருந்தும் வரும் தண்ணீரும் சுருளியில் அருவியாக கொட்டுவதை அங்கு வந்தவர்கள் பார்த்து ரசித்தனர். வனப்பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவியில் கடும் கட்டுப்பாடுகளுடன், கூடுதல் கட்டணமும் வசூலித்து வரும் நிலையில், விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

சேலம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் பாதுகாப்பு கருதி, பூலாம்பட்டி- நெருஞ்சிப்பேட்டை இடையே காவிரி ஆற்றின் குறுக்கே இயங்கிவந்த விசைப்படகு போக்குவரத்து கடந்த வாரம் நிறுத்தப்பட்டது. அணையின் 16 கண் மதகில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.