​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திற்கு தெரியும் - உயர்நீதிமன்றம் நீதிபதிகள்

Published : Apr 27, 2018 5:57 PM

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திற்கு தெரியும் - உயர்நீதிமன்றம் நீதிபதிகள்

Apr 27, 2018 5:57 PM

18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க  வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது  நீதிமன்றத்திற்கு தெரியும் என, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு கூறியுள்ளது. இந்த வழககில் தீர்ப்பை முதலில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய நபரை நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று வழக்கு விசாரணைகள் தொடங்கியபோது, சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் 11 எம்எல்ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை சுட்டிக்காட்டினார். மேலும் 18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் கடந்த ஜனவரி மாதமே விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். 11-ஐ விட 18 பெரிது என்பதால் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கில்தான் முதலில் தீர்ப்பு வழங்க வேண்டும் என தேவராஜன் வலியுறுத்தினார்.

இரண்டு வழக்குகளையும் இரு வேறு அமர்வுகள் விசாரிப்பதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, வழக்குகள் முடிவடைந்து தீர்ப்பு தயாராகிவிட்டால் வழங்கப்பட்டு விடும் எனக் குறிப்பிட்டார். ஆனால் 18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில்தான் முதலில் தீர்ப்பு வழங்க வேண்டும் என தேவராஜன் மீண்டும் வலியுறுத்தியபோது, எந்தெந்த வழக்கில் எப்போது தீர்ப்பு என்பதை வழக்கை விசாரிக்கும் அமர்வுதான் முடிவு செய்யும் என்று தலைமை நீதிபதி கூறினார். வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்குவது உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும், ஒரு வழக்கில் எப்போது தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளுக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வழக்கில் தீர்ப்பை இப்போது கொடுங்கள், நாளைக்கு கொடுங்கள் என்று யாரும் நீதிபதிகளை கோர முடியாது எனவும் இந்திரா பானர்ஜி தெரிவித்தார். முறையீட்டைச் செய்த தேவராஜன் எரிச்சலூட்டும் வகையில் மீண்டும் அதே கருத்தை தெரிவித்தபோது, இந்திராபானர்ஜி தலைமையிலான அமர்வு கடும் கோபம் கொண்டது. 18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் மனுதாரர்கூட அல்லாத ஒருவர், நீதிமன்றத்திற்கு இடையூறு செய்வதுடன், நேரத்தை வீணடிப்பதை ஏற்க முடியாது எனக் கூறி அவரை நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றுமாறு மத்திய படை காவலர்களுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தேவராஜன் நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.