​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேனர் தான் காரணம், வெட்டவெளிச்சமாக்கிய சிசிடிவி - தண்டனை என்ன?

Published : Sep 13, 2019 8:45 PM

பேனர் தான் காரணம், வெட்டவெளிச்சமாக்கிய சிசிடிவி - தண்டனை என்ன?

Sep 13, 2019 8:45 PM

சென்னையில் இளம் மென் பொறியாளர் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு முழு முதற்காரணமும் அரசியல் கட்சியினர் வைத்த பேனர் தான் என்பது  சிசிடிவி காட்சி மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விபத்தில் சிக்கிய சுபஸ்ரீயின் உயிரை காப்பாற்ற இளைஞர்கள் சிலர் சேர்ந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு கைகளாலேயே சுமந்து சென்று, வேறு வாகனங்கள் ஏற்ற மறுத்ததால் மீன் பாடி வண்டியில் ஏற்றி  மருத்துவமனைக்கு அனுப்பும் காட்சிகள் காண்போர் மனதை பிசைகிறது. 

கந்தன்சாவடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுபஸ்ரீ, இன்னும் சில நாட்களில் கனடா சென்று பணிபுரியும் கனவுகளுடன் இருந்தார். அதற்கான தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் மீது சாலையின் நடுவே தொங்கி கொண்டிருந்த பேனர் விழுந்ததில் கீழே விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.

இந்த விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்துள்ள நிலையில், விபத்திற்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமலில் உள்ள உத்தரவுகளை மதிக்காமல், அதற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவது என்ற இந்திய தண்டனை சட்டம் 189-பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மட்டுமல்லாமல், அதை கண்காணிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட வருவாய் துறையினர், காவல் துறையினர் உட்பட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த விபத்திற்கு காரணம் சாலையின் நடுவே இருந்த பேனர் தான் என கூறப்பட்ட நிலையில், அந்த பேனர் சுபஸ்ரீயின் உயிரை பறித்தது எப்படி என்பது, சிசிடிவி காட்சியில் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

விபத்தின் போது லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுபஸ்ரீயை சிறுது தொலைவில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இளைஞர்கள் சிலர் கையில் தூக்கி சுமந்து செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. இந்த விபத்தை பார்த்துவிட்டு கடந்து சென்ற வாகனங்களில் ஒன்று கூட நிற்காமல் சென்றுவிடவே, இளைஞர்கள் சுமார் நூறு மீட்டர் தூரம் கைகளில் தூக்கிச் சென்ற பிறகு ஒரு மீன் பாடி வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு சுபஸ்ரீயை கொண்டு செல்லும் காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.

இதனிடையே குரோம்பேட்டையில் நடந்த சுபஸ்ரீயின் இறுதி அஞ்சலியில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். அவரது நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தாம்பரத்தில் மெழுவர்த்தி ஏற்றி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இனி பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைப்பவர்களை எதிர்த்து கேள்வி கேட்போம் எனவும், இது போன்றதொரு இழப்பு ஏற்படாமல் தடுப்போம் என்றும் சுபஸ்ரீயின் உருவபடத்திற்கு முன்பு அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.