​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுட்டுக் கொல்லப்பட்ட நாய்க்கு இறுதிச்சடங்கு..! கண்ணீர் விட்ட வானம்..!

Published : Sep 13, 2019 8:17 PM



சுட்டுக் கொல்லப்பட்ட நாய்க்கு இறுதிச்சடங்கு..! கண்ணீர் விட்ட வானம்..!

Sep 13, 2019 8:17 PM

கரூரில் சுட்டுகொல்லப்பட்ட நாய்க்கு மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க மனிதர்களுக்கு செய்வது போல இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாயை  அடக்கம் செய்தததும் வானமே கண்ணீர் விடுவது போல அங்கு மழை பொழிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கரூர் வெங்கமேடு கணக்குபிள்ளை தெரு மக்களின் செல்லபிள்ளையான ரமேஷ் என்கிற நாய் தான் சுட்டுக் கொல்லப்பட்ட செல்லபிராணி..!

இந்த நாயை குட்டியாக இருந்தது முதல் அனைத்து வீட்டிலும் சோறு போட்டு பாசம் காட்டி வளர்த்து வந்ததால் கடந்த 9 வருடங்களாக அந்த தெருவில் திருடர்களை நுழைய விடாமல், காத்துவந்தது ரமேஷ்..! கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வரும் பாலு என்பவரை நோக்கி குரைத்து உள்ளது. தன்னை குரைத்த நாயை பழிவாங்க திட்டமிட்ட பாலு தனது நண்பரான நகராட்சி ஊழியர் ஒருவர் துணையுடன், வேட்டையாடும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த ஒருவரை அழைத்து வந்து நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகின்றது.

இதையறிந்த அந்தப்பகுதி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கள் செல்லபிராணியின் சடலத்தை அங்குள்ள சாலையின் குறுக்கே போட்டு சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாலு, நகராட்சி ஊழியர், சுட்டுக் கொன்ற நபர் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து உயிரிழந்த செல்ல பிராணியின் சடலத்தை ஐஸ் பெட்டியில் வைத்து இரவு முழுவதும் அருகிலேயே சோகத்துடன் அமர்ந்திருந்தனர்.

பின்னர் காவல் துறையினர் நாயின் சடலத்தை கால் நடை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று பரிசோதனை செய்தனர். அப்போது வேட்டை துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் 7 ரவைகள் உள்ளே இருந்தௌ கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாயின் சடலம் வெங்கமேடு கணக்கு பிள்ளை தெரு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கனத்த இதயத்துடன் நாயின் சடலத்தை பெற்றுச்சென்ற அப்பகுதி வாசிகள் மனிதர்களை அடக்கம் செய்வது போன்று குழி தோண்டி இறுதி சடங்குகள் செய்து நாயை குழிக்குள் இறக்கி கண்ணீர் மல்க அடக்கம் செய்தனர்.

நாயின் சடலத்தை மண் போட்டு மூடிய அடுத்த நொடியே அங்கு மழை பொழியத் தொடங்கியது. இதையடுத்து விலங்குகளை துன்புறுத்த மாட்டோம் பாதுகாப்போம் என்று கண்ணீர் மல்க உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் விலங்குகள் மீது பாசம் கொண்ட அப்பகுதி வாசிகள்..!

மனிதர்களை போலவே அன்பு, பாசம், நேசம், விஸ்வாசம் கொண்ட செல்லபிராணி நாய்கள் என்று சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், மனிதர்களுக்கு எப்படி திடீர் என்று கோபம் வருவது ஒரு அடிப்படை இயல்போ, அது போல தான் குரைப்பது நாய்களின் இயல்பு..! என்கின்றனர்

மனிதர்கள் வைக்கும் உணவு மிச்சத்தை உண்டு ஒட்டுமொத்த தெருவையும் காக்கும் பாசமுள்ள காவலனாக வலம் வரும் தெரு நாய்களிடம் வீட்டில் உள்ள உறுப்பினரை போல பாசம் காட்டுவோம்..! துன்புறுத்தாமல் பாதுகாப்போம்..!