ப.சிதம்பரம் மேல்முறையீடு தள்ளுபடி...
Published : Aug 26, 2019 12:14 PM
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்ஜாமீன் தர மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஜாமீன் தேவை எனில் விசாரணை நீதிமன்றத்தை சிதம்பரம் அணுகலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய தொடர்ந்து பல முறை இடைக்கால தடை விதித்து வந்த நீதிமன்றம், இறுதியாக சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னதாகவே, கடந்த புதன்கிழமை அன்று ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் சிபிஐயால் சிதம்பரம் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விட்ட நிலையில், முன்ஜாமீன் கோரும் மனு அர்த்தமற்றது என்று கூறி அந்த மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஜாமீன் தேவையென்றால் ப.சிதம்பரம் விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.