​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.எம்.ஏ. நிதி நிறுவன மோசடி தொடர்பாக குமாரசாமியிடம் விசாரிக்க சி.பி.ஐ. திட்டம்

Published : Aug 25, 2019 5:52 PM

ஐ.எம்.ஏ. நிதி நிறுவன மோசடி தொடர்பாக குமாரசாமியிடம் விசாரிக்க சி.பி.ஐ. திட்டம்

Aug 25, 2019 5:52 PM

ஐ.எம்.ஏ. நிதி நிறுவன பண மோசடி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான குமாரசாமியிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த ஐ.எம்.ஏ. நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி, 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோரிடம் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி மோசடி செய்து உள்ளது.

இந்த மோசடி குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், ஐ.எம்.ஏ. குழுவின் தலைவர் முகமது மன்சூர்அலிகான் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த மோசடி விவகாரம் குறித்து மாநில அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதை அடுத்து, 20 ஆயிரம் பக்கம் கொண்ட ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவுக்காக குமாரசாமிக்கு 3 நபர்கள் மூலம் 5 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக மன்சூர் அலிகான் வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் இடம் பெற்றுள்ளதால், இதன் அடிப்படையில் குமாரசாமியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டு உள்ளது.

இதேபோல முன்னாள் காவல் ஆணையர் அலோக்குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க உள்ளது. அலோக்குமார் தன்னிடம் 25 கோடி ரூபாய் கேட்டதாக மன்சூர் அலிகான் விசாரணையின் போது தெரிவித்துள்ளார். இதேபோல பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய நாயுடுவும் ஐ.எம்.ஏ. நிறுவனத்திடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

நிஜா முதீன் என்பவர் மூலம் அவர் பணம் பெற்றதாக கான் தெரிவித்து இருக்கிறார். இதனால் அவரிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்த உள்ளது. இவர்கள் தவிர மேலும் 13-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.