​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீவிரவாதிகள் ஊடுருவல்! தமிழகம் முழுவதும் தீவிர சோதனை

Published : Aug 23, 2019 1:15 PM

தீவிரவாதிகள் ஊடுருவல்! தமிழகம் முழுவதும் தீவிர சோதனை

Aug 23, 2019 1:15 PM

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், எல்லைப் பகுதிகளில் வாகனத் தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

சென்னை:

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக வந்த தகவலை அடுத்து, சென்னை முழுவதும் பாதுகாப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்றிரவு முதலே சிறப்பு வாகன தணிக்கை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

ஈரோடு:

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலை அடுத்த ஈரோடு  மாவட்டத்தில் எல்லைப் பகுதிகளில் 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவின் பேரில், கருங்கல்பாளையம், நொய்யல், சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடிகளில் கண்காணிப்பும் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  ஒவ்வொரு சோதனை சாவடியிலும் 5க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். திடீரென சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையான பண்ணாரி சோதனைச் சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியூர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வகையான வாகனங்களும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. வாகனங்கள் எங்கிருந்து வருகின்றன, எங்கு செல்கின்றன, அவற்றின் பதிவு எண், அதில் பயணிப்போரின் விவரங்கள் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 

கோவை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன் மிகத் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தலைமையில் நேற்று நள்ளிரவு  முதல் மேட்டுப்பாளையம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார், நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மோகன் நிவாஸ் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊடுருவிய தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக கோவை மாவட்டம் இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டுப்பாளையம் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தபட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்கள், அங்கிருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் என அனைத்தையும், மேட்டுப்பாளையம் ஆற்றுப் பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் தீவிரமாக சோதனையிடுகின்றனர். மோப்ப நாய்களும் இந்த பணிகளில் ஈடுபடுத்தபட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட போலீசார் மேட்டுப்பாளையம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் உள்ள புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் தமிழ்நாடு கமாண்டோ போர்ஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.வணிக வளாகத்தின் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்த அவர்கள் ஆலோசனைகளையும் வழங்கினர். மேலும் வெடிகுண்டு கண்டறியும் போலீசாரும் வணிக வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். இரவு பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட 3 டிஎஸ்பிக்கள் தலைமையிலான 170 தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 108 காவலர்கள் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள தனியார் மற்றும் பேராலய விடுதிகளில் தங்கியிருப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.

ஆலயத்துக்கு வந்து செல்வோரில் சந்தேகப்படும் படியான நபர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமான சாலைகளில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 15 போலீசார் விடிய விடிய வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். 

மதுரை:

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கோவிலின் 4 வாயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே வரிசைகள் அமைத்து, மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகள் மூலம் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல் மாட்டுத்தாவணி மற்றும் பெரியார் பேருந்து நிலையங்களிலும் விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் கடல் வழியே தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்ற தகவலால், அங்கு கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாம்பன் ரயில்வே தூக்குப் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லைப்பகுதியில் கடற்படை கப்பல்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை, மூன்றாவது திட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம்  தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

மண்டபம் காவல்படைக்குச் சொந்தமான நீரிலும் நிலத்திலும் செல்லும் ஹோவர்கிராப்ட் (Hovercraft) கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. கடற்படை கமாண்டர் தலைமையிலான வீரர்கள், மீனவ மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ராமநாதசுவாமி கோவிலில் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு தீவிர சோதனை செய்த பிறகே பக்தர்கள்  அனுமதிக்கப்படுகின்றனர்.

விருதுநகர்

தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற தகவலைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிர சோதனைகளுக்குப் பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

திருப்பூர்

திருப்பூர் ரயில் நிலையம் உட்பட மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர் பகுதி மட்டுமல்லாது மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளான உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட இடங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கடலூர்

கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை தீவிரப் படுத்தியுள்ள போலீசார், புதுச்சேரி - தமிழக எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 33 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி

தூத்துக்குடி கடல் பகுதியில் கடலோரக் காவல்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர எல்லைப்பகுதியில் வெளியூரில் இருந்து வரும் வாகனங்களும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற தகவலைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார், சோதனை மேற்கொண்டனர். மேட்டூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜா தலைமையில் வந்த 3 பேர் கொண்ட போலீசார் அணையின் வலது கரை, இடதுகரை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே நாகப்பட்டினம் அடுத்துள்ள நாகூர் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உறவினர் ஒருவரது வீட்டுக்கு வந்திருந்ததாகக் கூறப்படும் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியை சேர்ந்த செய்யது அபுதாகிர் என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது செல்போன் அழைப்புகளின் விவரங்களை சேகரித்ததன் அடிப்படையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த விசாரணை, 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 

சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர், போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். மேலும் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள், ரயில் நடைமேடை, ரயிலில் இருந்த பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. குறிப்பாக சென்னையிலிருந்து தென்பகுதி நோக்கி சென்ற நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னையிலிருந்து டெல்லி நோக்கி சென்ற கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தீவிர சோதனைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் நிலையங்களில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரியும் நபர்கள், அவர்களது அசைவுகளையும் சென்ட்ரலில் உள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். ரயில்வே இருப்பு பாதைகளிலும் இரவு நேரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரியில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் கண்காணிப்பாளர் மாறன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது உடமைகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜ கோபுரம், திருமஞ்சன் கோபுரம், அம்மனி அம்மன் கோபுரம் மற்றும் பேய கோபுரம் உள்ளிட்ட 4 நுழைவு வாயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது. இருப்புப்பாதை போலீசாரும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கருவிகள் மூலம் ரயில் பெட்டி இருக்கைகளில் சோதனை செய்யப்பட்டது.