​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நளினிக்கு பரோல் நீட்டிப்பு..!

Published : Aug 22, 2019 12:08 PM

நளினிக்கு பரோல் நீட்டிப்பு..!

Aug 22, 2019 12:08 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 3 வாரகாலத்திற்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 ஆண்டுகள் சிறைவாசம் இருந்துவரும் நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 6 மாத காலம் பரோல் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 28 ஆண்டுகாலம் சிறையில் உள்ள தனக்கு ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் பரோல் கூட வழங்கவில்லை என நளினி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை  விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வு, மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க நளினிக்கு ஒருமாதம் பரோல் வழங்கி ஜூலை 5 ஆம் தேதி உத்தரவிட்டனர். இதனையடுத்து ஜூலை 25 ஆம் தேதி முதல் நளினி சிறை விடுப்பில் வெளியே வந்தார்.

இந்நிலையில் மகளின் திருமண ஏற்பாடுகள் இன்னும் நிறைவடையாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி நளினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் பரோல் காலத்தில் நளினி மீது, நீதிமன்ற விதிகளை மீறியதாக ஏதேனும் புகார்கள் உள்ளனவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் எந்த புகாரும் இல்லையென தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 3 வார காலத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டனர்.

மேலும், பரோல் காலத்தில் விதிகளை மீறினால் சிறை விடுப்பை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு என எச்சரித்த நீதிபதிகள், பரோல் காலம் முடிந்தவுடன் சிறை அதிகாரிகளிடம் சரணடையவும் நளினிக்கு உத்தரவிட்டனர்.