​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய மோட்டார் வாகன சட்டம் - நீதிமன்றத்தில் வசூலிக்கப்படும் அபராத தொகை

Published : Aug 22, 2019 6:57 AM

புதிய மோட்டார் வாகன சட்டம் - நீதிமன்றத்தில் வசூலிக்கப்படும் அபராத தொகை

Aug 22, 2019 6:57 AM

மோட்டார் வாகன சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், உயர்த்தப்பட்ட அபராத தொகை நீதிமன்றத்தில் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தொடரின்போது, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக தலைகவசம் அணியாமல் ஓட்டுவது குடிப்போதையில் வாகனம் ஓட்டுவது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுவது போன்ற பல குற்றங்களுக்கு அபராதம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அபராதத்தை நீதிமன்றங்கள் வசூலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல் துறையை பொருத்தவரை தற்போதுவரை தங்களுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும், எனவே பழைய அபராதமே வசூலித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்று தெரிவிக்கும் காவல்துறையினர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த பரிந்துரைப்பதாக கூறுகின்றனர்.

அவ்வாறு சென்னையில் கடந்த 20-ஆம் தேதிக்கு பிறகு அபராதம் விதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அபராதத் தொகையை செலுத்தச் சென்றபோது அவர்களிடம் பழைய அபராதத் தொகையான 2 ஆயிரம் ரூபாய் வசூலிக்காமல் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அபராதம் செலுத்தப்பட்டதற்கான ரசீது சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது.

இதுகுறித்து போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அபராதம் வசூலிக்க முதலில் முறையான மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதன் பிறகு அபராதம் வசூலிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், பல கட்ட நடவடிக்கை இருப்பதால், ஸ்பாட் பைன் எனக் கூறப்படும் அனைத்து அபராதங்களும் பழைய முறைப்படியே வசூலித்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் கூறுகின்றனர்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் தற்போது வரை எந்த அபராதமும் காவல்துறை சார்பில் வசூலிக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களுக்காக நடமாடும் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதால் அவர்கள் அபராதம் கட்ட செல்லும் போது நீதிபதிகள் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அபராதம் விதித்திருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய மோட்டர் வாகன சட்டம் மத்திய அரசின் அரசிதழில் வெளியானதே நீதித்துறை பின்பற்றப் போதுமானது என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்ட அபராத தொகை வசூலிக்கப்படுவதாக சட்ட வல்லுனர்கள் விளக்கமளித்துள்ளனர்.

ஏற்கனவே புதிய மோட்டார் வாகன சட்டம் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்கள் அமல்படுத்த தொடங்கி விட்டதால், விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு புளியை கரைக்க தொடங்கி விட்டது.