​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 24 பேர் பலி

Published : Aug 19, 2019 2:27 PM

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 24 பேர் பலி

Aug 19, 2019 2:27 PM

மாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 24 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இமாச்சலில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழையால் சட்லஜ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சிம்லா அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஷாக்ரா, பாலடி, பிண்ட்லா மற்றும் ஜெட்வி உள்ளிட்ட கிராமங்களுக்கான பாதை தடைபட்டுள்ளது.

லகால் ஸ்பிதி (Lahaul-Spiti) மாவட்டத்தில் வெள்ளத்தில் சாலை அடித்து செல்லப்பட்ட நிலையில், அங்கு வெளிநாட்டினர் உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகள் 400க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டுள்ளனர். அவர்களுள் 150 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் சேதமடைந்துள்ள புன்ட்டார் - மணிக்கரான் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் மணாலி - குலு இடையிலான தேசிய நெடுஞ்சாலை 3ல், கனமழையால் சாலையின் ஒரு பகுதி அரித்து செல்லப்பட்ட நிலையில் அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹமிபூர் மாவட்டத்தில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்நிலையில் குமாவுன் பகுதிகளில் (Kumaun region) அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக டேராடூன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.