​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உணவகத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரண்

Published : Aug 18, 2019 11:49 AM

உணவகத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரண்

Aug 18, 2019 11:49 AM

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உணவகத்தில் வைத்து இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருத்தணி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள உணவகத்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.

பட்டாக் கத்திகளுடன் வந்த கும்பல் ஒன்று, மகேஷை ஓட ஓட விரட்டி, உணவகத்திற்குள் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி சாய்த்து விட்டு தப்பிச் சென்றது. கொலையாளிகளைப் பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மகேஷை வெட்டிக் கொலை செய்த ஜப்பான் என்கிற விமல்ராஜ், அஜீத்குமார், ராஜ்குமார், கோபிராஜ் ஆகிய நான்கு பேர் திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சரண் அடைந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த கைப்பந்து போட்டியின் போது இன்பராஜ், விமல்ராஜ் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலால் அடுத்தடுத்து இரு படுகொலைகள் அரங்கேறி உள்ளன.

அதன் தொடர்ச்சியாகவே தற்போது மகேஷ் கொல்லப்பட்டு இருப்பதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சரணடைந்த 4 பேரிடமும்  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.